பேரின்பச் சோலை
147
ஒத்துணர்வோ பொதுநலத்தையும் உலக நலத்தையும் அடிப் படையாகக் கொண்டது. அஃது உலகின் துன்ப நீக்கத்தையே நோக்கமாக உடையது. அஃது உலகளாவப் பரந்தது. ஏனெனில் உலகில் துன்பத்துக்காளாகாத மனிதர், உயிர் இல்லை. அவ் வுயிர்களில் பெரும்பாலானவை, மனிதர்களில் பெரும்பாலானவர் துன்பத்தினால் பண்பட்டவர்கள் அல்லர். துன்பத்தை இன்ப மாகக் கொண்டு, அதன் படிப்பினைகளால் இன்பம் வளர்க்கும் வகைகளை யறிந்தவர்களல்லர். அப் படிப்பினைகளும் ஓர் ஆண்டில், ஒரு வாழ்வில், ஓர் ஊழியில்கூட எப்போதும் கைவந்து விடுபவையல்ல. அவை பல தலைமுறை வாழ்வுகள் கடந்தே இனப் பண்பாக வளர்பவை.
இனத்தின் வாழ்வு தாழ்வுகளிடையே பலவகையில் அல்லல் பட்டு,அவ்வனுபவத்தின் மீதே அவை இனத்தில் உருவாகி, இனப் பண்பில் முதிர்ந்த உயிர்களில், தனி மனிதர் வாழ்வில் தழைக்கின்றன. இனத்தில் தோன்றி, இனத்தின் செல்வர்களாகிய தனி மனிதர் வாழ்வில் படர்ந்து மீண்டும் இனம் வளர்க்கின்றன. இனவாழ்வு என்னும் பயிரில் தோன்றிய பொன்னிற மணிகளின் அறுவடை இது.
இனத்தின் முற்றிய வளமார்ந்த அன்பு, அறிவுக் கதிர்களாக மணியுருப்பெற்று, அது மீண்டும் இனம் வளர்க்கும் புத்துயிர் வாழ்வின் கருமணிகள், விதைகள் விளைக்கின்றது. இக் கதிர்களைத் தன் அகவாழ்வில் கொண்ட மனிதனின் ஒத்துணர்வு ன முழுவதும் பரவி இன உயிரலைகளை மேலும் ஊக்குகிறது.
அறியாமை காரணமாக, மனிதன் இயற்கையின் அமைதியை மீறுவதனாலேயே துன்பங்கள் உண்டாகின்றன. ஒரேவகையான அமைதிகள் மீறப்படும்போது துன்பங்களும் ஒரே வகையாக அமைகின்றன. மீண்டும் மீண்டும் ஒரே அமைதி மீறப்பட்டு, ஒரே துன்பம் மறுபடியும் மறுபடியும் ஏற்படுவதனால், அத்துன்பத்தின் அனுபவம் அக அமைதியுடையவன் சிந்தனையைத் தூண்டி, துன்ப காரணமான ஒழுங்கமைதியின் ஒரு கூற்றை அவனுக்கு அறிவிக்கிறது. ஒழுங்கமைதி பற்றிய இவ்வறிவு, அதைப் பின் பற்றும் வகை ஆகிய இவையே மெய்யறிவு, அன்பு ஆகின்றன. ஒத்துணர்வு இவற்றின் இணைவால் மலர்கின்ற மலர்ச்சியே யாகும்.