7. மன்னிக்கும் பண்பு
'கண்டிப்பீர்! கண்டிக்கும் உள்ளம் உணர்திரோ?
தூங்கி விழுந்தும் துன்பம் உழந்தும்
ஏங்கும் பாழுயிர் ஏக்கம் அகற்றாத
(கண்டிப்பீர்)
வீங்கும் உள்ளத்து ஏக்கம் காணாமல்
தாங்கற் கரும்கடுஞ் சொற்களை வீசிக்
(கண்டிப்பீர்)
கண்டிப்பீர்! கண்டிக்கும் உள்ளம் உணர்திரேல்
பாங்கிற் பயின்ற பண்புடை இன்சொல்
நீங்காத் துயர் நீக்கும் அருமருந் தஃதன்றோ?
(கண்டிப்பீர்)
பழிக்குப் பழியினும் மேலான பண்பே
(கண்டிப்பீர்)
பாசங் கலந்த மெய்யன்பே, மெய்யன்பே!
-ஷேக்ஸ்பியர்.
தமக்கு இழைக்கப்பட்ட தீங்குகளை மறவாது நினைவில் வைத்துக்கொண்டிருத்தல் ஆன்மிக இருளின் சின்னமாகும். அதனால் வேரூன்றி வளர்ந்துவரும் காழ்ப்பு ஆன்மிகத் தற்கொலைக்கு ஒப்பானது. இதை விடுத்து, மன்னிக்கும் இயல்பு பேணி அதில் செயல்முறையில் பயிற்சி பெறுவதே இன்ப அமைதிக்குரிய முதற்படி ஆகும்.
தீங்குகளை நினைந்து நினைந்து இரங்குபவனுக்கு உள்ள அமைதி என்றும் ஏற்பட முடியாது. ஓய்வில்லாமல் இடையறாது தீங்கையே நினைப்பதால், இழைக்கப்பட்ட தீங்கைவிடப் பன் மடங்கான தீங்கு உருவாகின்றது. தவிர, 'நாம் அநீதிக்கு ஆளாய் விட்டோம்' என்று ஒருவன் எண்ணுந்தோறும், அநீதிக்கான தூண்டுதலும் அகத்தே பன்மடங்காகப் பெருகும். அநீதிக்குப் பதில் அநீதி செய்வதே நீதி என்ற தன்மயக்கக் கருத்தும் உள்ளத்தில் ஆழ்ந்து வேரூன்றும்.
அநீதியை வளமான பயிராக வளர்க்கத்தக்க விதை இதுவே.