பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(186) ||

அப்பாத்துரையம் - 29

அதை நல்லது என்று அவன் கருதியதனாலேயே, துன்பந் தருவது என்று கூறப்பட்டாலும் அதைச் செய்வதிலேயே இன்பம் உண்டு என்று அவன் உறுதி கொண்டான். இதை அவன் கடைசி வாசகம் பச்சையாகக் காட்டுகிறது. தன் இன்ப வாழ்வுக்கும் நலத்திற்கும் உகந்தது அது என்று கருதியதனாலேயே பிறர் உரையையும் அது தரும் தீமையையும் மீறி அது செய்வதில் அவன் மகிழ்வு கொள்ள முடிந்தது.

அறிவு அனுபவத்தின் பயன்

ஒரு செயல் கெட்டதென்று ஒருவன் உண்மையிலேயே அறிவது எப்போது?

அவன் அதை அனுபவத்தால் அறிந்தவனாதல் வேண்டும். தீய செயலைச் செய்யும் ஒவ்வொரு தடவையும் அவன் தன் உடலையோ உளத்தையோ அல்லது இரண்டையுமோ கேட்டுக்கு உள்ளாக்கிக்கொள்ள நேருமென்பதை அவன் நீடித்த முன் அனுபவத்தால் அறிந்திருக்க வேண்டும். இக் கேடுகள் ஒவ்வொன்றும் தனிக்கேடுகளல்ல, தனித்தனி சங்கிலித்தொடர் போன்ற தீமையின் கோவைகளுக்குரிய தொடக்கத் தலைப்பே என்பதையும் அவன் நடைமுறையில் கண்டிருத்தல் அவசியம்.

இத்தகைய அனுபவ அறிவு பெற்றவன் அவற்றைத் திரும்பச் செய்ய எண்ணாதது மட்டுமல்ல. செய்யவிரும்பவும் மாட்டான். அவற்றின் மீது முன்பு இருந்த விருப்பம் அனுபவ அறிவினாலும் துன்பம் பற்றிய நீடித்த சிந்தனையினாலும் சுட்டெரிக்கப் பட்டிருக்கும். உண்மையில் சிந்தனையின் பயனாக, முன்பு அதில் இருப்பதாக அவன் கருதிய துன்பம்கூட, அதன் உண்மை உருவில், துன்பமாகக் காட்சியளிக்கும்.

அழகான பல்வண்ணப்புரி இழை என்று கருதிச் சிறு பிள்ளையாயிருக்கும்போது ஒருவன் எடுத்து விளையாடக் கருதிய சங்கிலிக்கருப்பன் பாம்பை எண்ணி, வளர்ந்தபின் அவன் எத்தகைய உணர்வு பெறுவானோ - அதையே அப்போலி இன்பத்தை எண்ணும்போது அனுபவ அறிவுடையவன் அடையான். சிறுகுழந்தை விரும்புவதுபோல நச்சுப் பாம்மை எடுத்துச் சட்டைப்பையில் போட்டுக்கொள்ள எந்த வளர்ந்த மனிதனும் விரும்பமாட்டான்.