(240
அப்பாத்துரையம் - 29
பிறர் மீது வசைபாடாதே. பிறர் உன் மீது வசை பாடினால் அதைப் பொருட்படுத்தாதே. அதற்கு எத்தகைய மதிப்பும் அளிக்காதே. தாக்குதலுக்கு ஆளானால் மோனமாயிரு. இவ்வழியில் நீ முதலில் தன்னை வெல்வாய். அதுவே பிறரையும் வென்றதாக முடியும். சொற்கள், செயல்கள் இல்லாமலே இந்த மோனம் பிறருக்குச் சரியான திருத்தத்தையும் சரியான படிப்பினையையும் தந்துவிடும்.
உயிர்மோனம்
க்
மோனம் மிகவும் விலையற்றது, மதிப்பேறியது. ஆனால் உண்மை மோனம், உயிர்மோனம் நாவின் மோனமன்று உள்ளத்தின் மோனம். இஃது இன்னும் விலையேறியது. பேராற்றலுடையது. மதிப்பேறியது. நாவை மட்டும் அடக்கி, அதன் பின்னணியில் அகநாவைத் தூண்டிக் கொண்டேயிருக்கும் உள்ளக் குமுறலைப் பேணிக்கொண்டிருப்பது நாவமைதியும் ஆகாது, உள்ள அமைதியும் ஆகாது. அது வாயாடும் வலிமைக் குறைவை ஒழித்ததும் ஆய்விடாது. அது ஆற்றலின் தலைப் பீடமாகவும் அமைய முடியாது.
உண்மை ஆற்றல் நிறைந்த மோனம் அகநாக் கடந்து உள்ளத்தின் அமைதி பேணும். இத்தகைய மோன அமைதி உள்ளத்தை நிரப்ப வேண்டும். இதயத்தின் ஒவ்வொரு கண்ணறை, ஒவ்வோர் அணுத்தோறும் அதுசென்று செறிய வேண்டும். அது மோனத்தின் அமைதி, அமைதியின் மோனமாக நிலவல் வேண்டும். தன்னை வெல்லும் அளவிலேயே, வென் றடக்கும் அளவிலேயே இஃது ஒருவனுக்குக் கை கூடுவது.
வெறியுணர்ச்சிகள், அவா மருட்சிகள், துயர்கள் மோனத்தின் தடத்தை, அஃதாவது உள்ளத்தின் ஆழ் தடத்தை அலைக்குங் காறும் மோனம் முழுநிறை மோனமாயியங்காது. அதன் அமைதி மேலீடானதாகவும், ஆழ்தட அலைகளால் அவ்வப்போது தாக்கப்படுவதாகவுமே இருக்கும். பிறர் செயல்கள், சொற்கள் மூலம் மனம் நைவுறுபவன் எவ்வளவு பொறுமையும் அமைதியும் புறத்தே பேணினாலும், உள்ளூர அந்த அகவேதனை அவன் ஆற்றலைக் குறைத்துக்கொண்டேயிருக்கும்; அவன் தன் னடக்கத்தை, தன்னமைதியைக் கலைத்துக்கொண்டேயிருக்கும்.