பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(272) ||

அப்பாத்துரையம் - 29

நீண்ட சுடருடன் எரியுந்தோறும், உன் வாழ்வில் இன்பம் பெரிதாகும்.

புற உலகிலிருந்து அக உலகிற்குச் செல். அக உலகிலிருந்து புற உலகை ஆள். மனிதனாயிருக்கும் வகை அதுவே. புறத்தே யிருந்து கொண்டு அகத்தை ஆளும் விலங்காகாதே. மனிதனாகச் சிந்தி, மனிதனாகச் செயலாற்று. புறவளம் நாடாதே! அகவளம் பெற்று, உன் அகவளத்தை நீ பெருக்கி, அதை உலக வளமாக்கு. உன் உலகின் மையமாகிய உன்னுள் அமைந்த உன் மையத்தைக் கண்டு, அதன் வழி நில்.

உன் நிலவுலகம் தன் மையமான ஞாயிற்றின் தளைக்குக் கட்டுப்பட்டு அதைச் சுற்றியோடுவதுபோல, நீ உன் மையத்தின் அக அமைதிகளுக்குக் கட்டுப்பட்டு, அதைச் சுற்றி நேர்வழி உணர்ந்தொழுகு. உன்னுள், உன் அக நடுவே ஒளிரும் விளக் கொளியே ஒளியாகக் கொண்டு உலவு. அதனைப் பிறர் இருள் என்று கூறினாலும் அதற்காகக் கவலைப்படாதே.

உனக்குப் பொறுப்பு நீயே. உன் மீதே நீ சார்க. உன்னை நீ நம்பாவிட்டால், உன்னை வேறு யார் நம்புவார்கள்? உன்னை நீ கண்டஞ்சினால் நீ வேறு யாரைக் கண்டஞ்ச மாட்டாய்? நீ உனக்கு உண்மையாயிராவிட்டால், நீ உன்னை வஞ்சித்தொழுக முற்பட்டால், உன்னை வேறு யார்தான் வஞ்சிக்க மாட்டார்கள், வேறு யார்தான் உன்னை நம்ப முடியும்?

பெரியார் என்பவர் யாவரும் தனி மனிதனின் தனியுரிமை என்னும் உறுதிமிக்க பாறைமீது நின்றே வாழ்க்கைப் புயலுடன் போராடி வெல்ல முற்படுவர். தன்னுரிமையில் நின்று நேர்வழி கண்டே உலகின் நெறியளக்க முற்படுவர். தங்கள் பாதையில் தாங்கள் செல்வதற்கு அவர்கள் வேறு யார் கட்டளையையும் எதிர்பார்க்க மாட்டார்கள். வேறு யார் விருப்பங்களையோ, கெஞ்சுதலையோ, வெறுப்புக்களையோ, பகைமைகளையோ மதிக்கமாட்டார்கள். அவ்வழி பின்பற்றுவதற்காக எவரது மன்னிப்பையோ பரிசையோ எதிர்பார்க்கவும் மாட்டார்கள்.

இகழும் புகழும் அவர்களுக்குச் சமம். அன்னத்தின் தூவி மீது படும் நீர்த்துளிகள்போல அவை அவர்களைச் சாராது உருண்டோடிடும். பிறர் கருத்துக்களைக் கொண்டு அவர்கள்