பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

35

உண்மையில் நிகழ்கணத்தில் இன்றியமையாததாகத் தேரப் படும் எந்தச் சிறுவினையையும் பெரியாரும் அறிவுடையாரும் சிறுவினையாகக் கருதவேமாட்டார்கள். சிறு வினையைப் பெருவினையின் வித்தாக, முன்னோடியாகக் கருதியே செயல் செய்வர். ஆனால் வலிமையற்றவன், அறிவற்றவன், சிறியவன், சிறுவினைகளைச் சிறிதென்று ஒதுக்கவோ, சிறு மனத்துடன் அரைகுறை ஆர்வத்துடன் செய்யவோ முனைவான். அவன் தன் முழு ஆற்றலையும் ஆர்வத்தையும் பெருவினைகளுக்கென்று ஒதுக்கி வைத்துக் கொண்டிருப்பான். ஆனால் சிறு வினைகள் சிறுவினைகளாகக் கடந்து செல்லுந்தோறும் அவையே பெருவினைகளாக, செயற்கருவினைகளாக அவன் கண்முன் வளர்ந்து கொண்டே செல்லும். சிறுவினையில் தவறிய அவன் தகுதி மேன்மேலும் அதே அளவிலும் குறைந்த வண்ணமாகவே தேய்ந்துகொண்டு செல்லும்.

தன்னை ஆளச் சிறிதும் முயலாதவனே பெரும்பாலும் மற்றவர்களை ஆளும் பேரவாவுடையவனாயிருப்பான். சிறு செயல்களைத் தட்டிக் கழிப்பவனே பெரும் பொறுப்புக்களை ஏற்கும் பேராவலுடையவனாயிருப்பான். ஆனால் செயற்குரியன அல்ல என்று ஒதுக்கும் ஒவ்வொரு செயலிலும் அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான். அவை உண்மையில் அவன் தகுதிக்குச் சிறியன அல்ல, பெரியன. அவை மேன்மேலும் அவன் தகுதிக்குப் பெரியன ஆகிக் கொண்டே போகின்றன. அவனும் மேன்மேலும் எவ்வினைக்கும் தகுதியற்ற சிறியவனாகத் தேய்ந்து கொண்டே செல்கிறான். பெருமை அவாவிய அவன் செல்லும் வழி பெருமை நோக்கிய வழியன்று, சிறுமை நோக்கிய வழியே.

உண்மையில் பெருமை நோக்கிய வழி சிறுமை அவாவிய வழியேயாகும். 'நாடினோர் பெறார், நாடாதவர் பெற்றார்’, 'வேண்டுவோர் எய்தார், வேண்டாதார் எய்துவர்' என்று மறைநூல்கள் கூறும் 'வேண்டாமை விழுச் செல்வ'த்தின் மறைதிறவு இதுவே.

பண்பு உரம்

சிறுவினைகளை வல்லமையுடனும் உறுதியுடனும் செய்து முடிப்பது ஆன்மீக ஆற்றலாகிய அகவல்லமையை வளர்க்கிறது. அதுபோலவே அவற்றை வலிமைக்கேட்டுடனும் தளர்வுடனும்