பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

49

தடுக்காது. மேலும் உன் பொதுநல அவா போலிப் பொதுநல அவாவாகிய புறப்புகழவாவாயிராமல், அகப் புகழவாவாக, உண்மைப் பொதுநலக் கனிவாக இருந்தால், நீ பிறர் புகழ் எதிர்பாராமல், பிறர் இகழ்கண்டுகூட அஞ்சாமல், பிறர் நலத் துக்குப் பாடுபட்டு, எதிர்த்த எதிர்ப்பாற்றல்கள் அத்தனையையும் தவிடுபொடியாக்குவாய்!

மெய்ப்புகழின்முன், தகுதியின்முன், போலிப் புகழும் இகழும் ஒருங்கே தகர்ந்து மடியும்.

சில கடமைகள் கடுமையுடையவையாக, உனக்குக் கடுப்புத் தருபவையாகத் தோற்றலாம். ஆனால் இது தோற்றம் மட்டுமே. இஃது அக்கடமையிலில்லை. உன் கருத்திலேயே உள்ளது. தன்னல நோக்கைப் பொதுநல நோக்காக ஆக்கிய உடனே, மனக்கோட்டத்தால் ஏற்படும் இக்கடுப்பும் கடுமையும் நீங்கும். கடம், அஃதாவது உடல் சார்ந்ததாக, தனி மனிதன் சார்ந்ததாக நீ கருதும் கடமை, உயிர் சார்ந்ததாக, உலகப் பொதுநலம் சார்ந்ததாக மாறியவுடன் இக்கடுப்பும் கடுமையும் இருந்த இடமும் தடமும் தெரியாமல் நீங்கிவிடும். உன் முயற்சியின் துன்பங்கள் இன்பங்களாக மாறும். தோல்விகள் என்பவை வெற்றியென்னும் வெல்லத்தினிடையே செறிவுற்ற கற்கண்டுக் கட்டிகளாக மாறிவிடும். இனிக்கும் கரும்பின் இடையிடையே யுள்ள கணுவின் செறிவாகத் தோற்றமளித்துவிடும்.

செல்கணங்கள் உன் வாழ்வின் நோக்கத்தால் வலிமை யுறட்டும்.பயனின்மை என்னும் மாசகன்று பயனுடையவையாக, தூய்மை பெறட்டும். செல்கணங்களின் சிறு கடமைகளில் உன் வாழ்க்கையார்வம் தோய்வித்துத் தன்னலமற்ற பொதுநல அவாவைச் செறிய வைப்பாயாக. உன் நினைவு, சொல், செயல் ஆகிய மூன்றிலும் வாழ்வின் வாய்மையொளியும் பொது நலத்தின் புத்தினிமையும் கமழட்டும். இம்முறையில் நீ பெறும் நீடித்த பயிற்சியும் பயிர்ப்பும், கல்வியும் கற்பும்; கலையும் களையும் உன் வாழ்வுக்குருதியான செல்கணங்களை உயிர்க் குருதிக் கணங்களாக்கும். செல்கணங்கள் செங்கணங்களாகி, குறையிலா நிறை வாழ்வாம் குருதியை உன்னுள் ஓடவைத்து உனக்கு எல்லையிலா இன்பப் பேறளிக்கும்.