பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

61

வகுக்கிறான். அறிவமைதி, அறிவுச் சிக்கனம், அறிவின் தன் மறுப்பாற்றல் ஆகியவை அவன் சிந்தனைகளில் வளர்ந்து சிந்தனையை நேர்வழி செலுத்துகின்றன.

அறிவமைதி என்பது தூய அறிவுச் சிந்தனைக்கான சூழல். உணர்ச்சிகளென்னும் ஊதைக்காற்றால் சிந்தனையின் போக்குத் தவறாமல் இது தடுக்கிறது. அறிவுச் சிக்கனம் என்பது அறிவுத் துறை அமைதிகளில் ஒன்று நேர்வழி என்பது குறுக்குவழியும் அன்று, சுற்று வழியும் அன்று. இயல்பான, இயற்கையோ டொட்டிய எளிய வழியே அது. இதனையறியத் தடையாய் இருப்பவையும் உணர்ச்சிகளே. அறிவமைதி இதனைக் காண உதவி செய்கிறது.

அறிவுத் தன்மறுப்பு என்பது நேர்வழி காண்பதற்குள்ள மற்றொரு தடையை நீக்குகிறது. குறுக்குவழியாகத் தோற்றும் பாதை நேர்பாதையாய் எப்போதும் அமையவேண்டு மென்பதில்லை; எளிய வழியாகத் தோற்றும் பாதையும் எப் போதும் எளிய பாதையாய் அமையவேண்டுமென்பதில்லை. போலிக் குறுக்கு வழியிலோ, போலி எளிய வழியிலோ உணர்ச்சிவழி நின்று திரும்பாமல் காப்பது இவ்வறிவுத் தன்மறுப்பேயாகும்.

இன்னல்களையும் இடர்களையும் விலக்கும் முன்னறிவுகூட உண்மையில் முன்னைய இன்னல்கள், இடர்கள் தந்த நீடித்த படிப்பினையேயாகும். இவ்வறிவு மெய்யறிவு மட்டுமல்ல, பொன்னறிவு, தொட்டதெல்லாம் பொன்னாக்கும் சிந்தாமணி யறிவென்று கூறலாம். ஏனெனில் அதன் ஒளிப்பட்டவுடனே மிகக் கடுமையான இடர்களும் கடுமை தளர்ந்துவிடும். மிகக் கடுஞ் சிக்கல்களும் சிக்கல் தகர்ந்துவிடும். இத்தகைய மணி யறிவின் துணைகொண்டு ஒருவன் உணர்ச்சிவசப்படாமல் நடுநிலையமைதி பெற முடியும். காரண காரியங்களையும் அவற்றின் சின்னஞ்சிறு நுணுக்க விளக்கங்களையும் தெள்ளத் தெளியக் காண இயலும். நேர்வழி காணுதல் இப்போது அவனுக்கு ஒரு பெரிய காரியமன்று. அவன் வாழ்க்கை நிலையான மெய்யுணர்வும் தொலைநோக்கும் உடையதாய் அமைகின்றது. டரின் திசையில் மீண்டும் திரும்பாத நீடின்பப் பாதையில் அது விரைகின்றது.