பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சிராம்மோன்

திரு. பெரோன் திடீரென்று பக்கவாதத்தால் தாக்குண்டு பாயும் படுக்கையுமானார். சில நாளில் நோயின் கடுமை நீங்கிற்று. ஆயினும் உடல் தேறும் தறுவாயில் சில நாள் மருந்தூற்றுக் களினருகில் சென்று தங்குதல் நலம் என்று மருத்துவர் கருதினர். அதன்படியே ‘பூர்பன் லார்ஷம் போல்ட்' என்ற மருந்தூற்றுப் பதிக்குச் செல்வதென்று ஏற்பாடாயிற்று.லாரைன் இத்தறுவாயில் தந்தையுடன் சென்று அவருக்குத் துணையுதவி செய்ய விரும்பினாள். தந்தை தம் வீட்டின் கட்டுப்பாட்டுக் கோட்டை யிலிருந்து விலகியிருக்கும் சமயம் இதுவேயாதலால் அதனை விட்டுவிட அவள் விரும்பவில்லை.

மாது பிளான்ஸி வழக்கம்போல் அவளைத் தடுத்து, எச்சரித்து, உறுக்கிப் பார்த்தாள். ஆனால், லாரைன் தன் வாழ்வில் முதல் தடவையாகத் தான் செய்த முடிவில் உறுதியாய் நின்றாள்.

பிளான்ஸி: உன்னை நான் போகவிடப் போவதில்லை. நீ போனால் திரும்ப இவ்வீட்டு வாயில் உனக்கு அடைக்கப் பட்டுவிடும்.

லாரைனை இவ்வச்சுறுத்தல்கள் அசைக்காததைக் கண்டு அவள் தொனியைச் சிறிது மாற்றி எழுந்து அவளருகில் வந்து பேசினாள்.

“நான் கதவடைத்துவிட்டால் நீ என்ன செய்ய முடியும் என்று அமைந்தாராய்ந்து பார். உன் தந்தை வீட்டில் தந்தைக்குப் பின்னாலிருந்து கொண்டு மாது பெரோனும் விடலையும் உன் செல்வத்தை உன்னை யறியாமல் கரைத்துக் குடிப்பர். உன் பக்கம் போராட ஆளிராது" என்றாள்.

லாரைன்: என் பக்கம் கடவுள் இருப்பார்.