பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

51

சிராம்மோனின் வடிவழகும் பண்பழகும் துலங்கின. அவள் நடந்ததே நடைக்கு இலக்கியமாயிற்று. அவள் ஆடையே ஆடையணியில் பழமைக்கும் புதுமைக்கும் நடுநிலைவாய்மை நாடியவர் முன் மாதிரியாயிருந்தது. அவள் பேச்சுகளோ மன்னவைக்குரிய இன்ப நயமும் மற்றையோரும் விரும்பி மேற்கொள்ளும் அறிவு நயமும் பொருந்தியதாயிருந்தது. அவளும் சிராம்மோனும் முதுமைக்கும் இளமைக்கும் இடையே, நகருக்கும் நாட்டுக்கும் இடையே ஒரு பாலமாகத் தோன்றினர். பழைய ஃபிரான்சு அவர்கள் மூலம் புதிய ஃபிரான்சு நோக்கிப் புன்முறுவல் பூத்தது.

மாது சிராம்மோனாகிவிட்ட லாரைனின் கடிதங்கள் இதற்குள் ஃபிரான்சின் நற்கடித இலக்கியத்தில் இடம் பெற்றுவிட்டன. அவள் கடிதத்தை அவள் உரையாடல் திறமும் நயமும் தோற்கடித்தன. இவை யாவற்றையும் அவள் அன்பு கலந்த இனிய அருட்பண்பும், நடுநிலை கோடாத நேர்மையும், நயங்கெடாத எளிமையும் வென்றன. ஃபிரான்சு நாட்டின் எல்லா வகுப்பினரிடையேயும் அவள் கிட்டத்தட்ட வேறுபடாத வகையில் நல்லருளொளி பாவித்தாள். அவள் சென்றவிட மெல்லாம், அவளைச் சூழ அமைதியும் இனிய தென்றலும் வீசின; கண்காணா ஒளியொன்று அவளைப் போர்த்து நின்று அவள் வனப்பையும் இனிமையையும் பெருக்கின என்று தோற்றிற்று.

மாது சிராம்மோன் முழு வளர்ச்சியடைந்துவிட்ட இப்போதும் நடுத்தர உயரமும் நடுத்தரத்தில் சற்றே குறைந்த வடிவும் வண்ணமும் உடையவளாயிருந்தாள். அவளைப் பார்த்த எவரும் அவள் சிற்றுருவுடைய சிங்காரி என்று எண்ணும் படியாகவே அவள் தோற்றம் இருந்தது. அக்கால ஃபிரெஞ்சுப் பெண்கள் விரும்பிய வகையில் அவள் கால்கள் வனப்புடையதாக மட்டுமன்றி, சற்று வளர்ந்த சிறு குழந்தைகளின் கால்களோ என்னும்படி அளவாயிருந்தன.இதனால் அவள் விரைந்த நடைகூட அன்ன மென்னடைபோல இருந்தது. மலரைத் தாங்கிய மென்காம்பு பட்டில் நடந்தாற்போல அவள் நடைபழகினாள்.

அவள் இல்லற வாழ்க்கை கொந்தளிப்பற்றதாயிருந்தது. அதில் ஆட்டபாட்டம் எதுவுமில்லை. ஆனால், கோடைக்கால வான்போல அது அமைதியுடையதாகவும்,இன்பமுடையதாகவுமே