பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

அப்பாத்துரையம் - 30

இருந்தது. அதற்கு நிறைவு தரும் முறையில் அவளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. முதற் குழந்தை பெண். அதுலாரனை உரித்து வைத்தது போலவே இருந்தது. அதனுடன் அதன் சாயல் மாது சிராம்மோன் அறையில் தொங்கவிடப் பட்டிருந்த அவள் அன்னை மாது ழீன் பெரோனின் சாயல் படிந்தும் இருந்தது. லாரைன், தன் தாயை நினைவூட்டிய அம்மகவைத் தன் உயிர்போலப் போற்றி வளர்த்தாள். அதற்கு அவளிட்ட பெயர் அடிலி என்பது. அடுத்த குழந்தை ஆண். அது பெரிதும் தந்தை சிரோம்மோனை நினைவூட்டுவதாயிருந்தது.அது தந்தை பெயரைச் சார்ந்து எல்ஃஜீயர் அகஸ்டி என்றே அழைக்கப் பட்டது.அன்பற்ற சிறைக் கூண்டில் வளர்ந்த லாரைன், மணவாழ்வு கழிந்து இக்குழந்தைகளின் அன்பில் மீண்டும் சிறைப்பட்டாள். ஆனால், இத்தடவை அவள் சிறை அவள் விரும்பி மேற்கொண்ட பொன் சிறையாயிருந்தது.

தன் இரு கண்மணிகளையும் லாரைன் இமைபோல் காத்தாள்.சிராம்மோனும் அவள் மணவாழ்வின் முன் திட்டமிட்ட திட்டத்திற்கு ஒரு சிறிதுகூட ஊறுவராத வகையில் அவளை அன்பாதரவுடனும் மதிப்புடனும் நேசித்து வந்தார். இதில் வியப்பில்லை. ஏனெனில், வயது கடந்தும், உள்ளத்தில் முதுமை யேறாத அச்சீரிய வீரர் அவளை உளமாறக் காதலித்தேயிருந்தார். மாது லாரைனோ காதலறியா விட்டாலும் அன்பின் அருமை அறிந்தவள். அவள் தன் உள்ளார்ந்த அன்பு முழுவதையும் அவர்மீது கொட்டி அவர் இல்லற வாழ்வினை நிறைந்த நல்லற வாழ்வு ஆக்கினாள். இல்லறத்துணைவர் நேசத்துக்கு அவர்கள் வாழ்வு ஒரு முன்மாதிரியாயிருந்தது.