பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

--

அப்பாத்துரையம் - 32

"ஏன்? மனித வாழ்வு இன்பகரமானதல்லவா?” என்று அவள் கேட்டாள். இளையோர் சிரித்தனர். "நாம் புயலில் விளையாடுகிறோம். அந்தப் புயலில் அவர்கள் கப்பல் கவிழ்கிறது. உடல் தத்தளித்து மூழ்குகிறது. மீன்கள் தின்றது போக, எலும்புகள் நம் தோட்டத்தில் வந்து விழுகின்றன. அவர்கள் இன்பத்தை அயலே சென்று பார்" என்று அவர்கள் உணர்ச்சியற்ற முறையில் பேசினார்கள். முதியோர் கேலி பேசவில்லை; அறிவுரை கூறினார்கள்.

"இன்பம் இங்குமட்டுமன்று: அங்கும் உண்டு, இங்குள்ள இன்பத்தை விட மிகுதியான இன்பங்கள்கூட அங்கே உண்டு. ஆனால் இங்குள்ள கலப்பற்ற இன்பம் அங்கே கிடையாது. மனிதர் வாழ்வின் பின்பகுதியில் கட்டிளமை தளர்ந்துவிடும். கட்டிளமையிலும் நோய், வறுமை ஆகிய புறத் தீமைகள் வந்து குறுக்கிடும். மனிதரின் பொய்ம்மை, வஞ்சகம், பொறாமை ஆகிய அகத் தீமைகளும் உண்டு. இவை ஒன்றும் நமக்குக் கிடையாது.

"மேலும் மனிதர் இன்ன சமயம் என்றில்லாது இறக்கலாம். நீடித்து வாழ்ந்தாலும் நூறாண்டுக்கு மேல் வாழ மாட்டார்கள். அதில் முதுமையும் சிறு பருவமும்போக, இருபது முப்பது ஆண்டுகளுக்குமேல் நல்வாழ்வு இருப்பதில்லை. ஆனால் நாமோ முந்நூறு ஆண்டுகளுக்குமேல் இளநலம் பெறுகிறோம். அதன் பின்னும் நுரையாக உலவுவோம்." என்று அவர்கள் கூறினர்.

சிறியோர் உணர்ச்சியற்ற கேலி, பெரியோர்அறிவுரைகள் இவை எதுவும் வேல்விழிக்கு மனித உலகிலுள்ள பாசத்தை மாற்றவில்லை. துன்பங்கலத்த சில நாளைய இன்பமாயினும், மனித உலக இன்பமே பெரிது என்ற அவள் எக்காரணத்தாலோ எண்ணினாள்.

இறுதியில் நீண்டகாலமாக அவள் கனவு கண்ட நாளும் வந்தது. புத்திளமையின் பொலிவுடன் அவள் புத்தாடை அணிமணிகள் பூண்டு அழகரசியாய் விளங்கினாள். அவள் கடைசிப் புதல்வியாதலால், அவள் விழா கடலுலகம் காணாத முறையில் கொண்டாடப்பட்டது. ஆனால் அவள் தன் விழாவிலே கருத்துச் செலுத்தவில்லை; அதன் முடிவுக்கே அவள் ஆவலுடன் காத்திருந்தாள். முடிந்ததும் அவள் நீர்ப்பரப்பை