பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

11

அவ்வடிவம் இளவரசன் செழுங்கோவேயாகும். தோழர் களெல்லாம் போனபின்பும் அவன் கடலையே பார்த்துக் கொண்டிருந்தான். கடைசி வாணவெடி வெடித்த போது எழுந்த குரல் அவனுக்கு வியப்பூட்டிற்று. அது மனிதக் குரல் போலவே இருந்தது. ஒன்று அது கடல் நங்கையர் குரலாயிருக்கவேண்டும்; அல்லது ஏதேனும் புதுவகைப் பறவையாகக்கூட இருக்கலாம் என்று அவன் நினைத்தான். அதைக் காணும் அவாவுடன்தான் அவன் பலகணியில் நின்றிருந்தான்.

கூக்குரலிட்டது வேல்விழி என்பதை அறியாமலே, கூக்குரல் கேட்ட இடத்தில் அவன் பார்வையைச் செலுத்தினான். பாலாடை போர்த்த ஓர் அழகிய நங்கையைப் பார்த்ததாக அவன் ஒருகணம் எண்ணினான். ஆனால் அடுத்த கணம் வேல்விழி நீரில் மூழ்கி வேறு வழியில் அலைகளிடையே திரிந்தாள். தான் கண்டது கனவாய்த்தான் இருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.

செழுங்கோ கடலையும், வேல்விழி செழுங்கோவையும் எவ்வளவு நேரம் பார்த்திருந்தனர் என்று கூற முடியாது. இருவரும் புற உலகை மறந்திருந்தனர். ஆனால் அவர்களைச் சுற்றிலும் கடல் இருண்டு குமுறிற்று, திடுமென வானத்தில் இடிஇடித்து மின்னல் மின்னிற்று. ஒரு சில கணங்களுக்குள் கடலும் வானும் ஒரே சூறாவளியில் சிக்கிப் புரண்டன. கப்பலில் ஒளி மறைந்தது. இளவரசன் உருவமும் மறைந்தது.

ருட்டில் கப்பல் உருண்டுருண்டு கழல்வதை அவள் கண்டாள். திடுமென ஒரு பேரொலி கேட்டது. உடைந்தது கப்பல்; கப்பலெங்கும் ஒரே ஆர்ப்பாட்டமாயிற்று; ஆர்ப்பாட்டம் கடலின் ஆர்ப்பாட்டத்தில் கலந்தது. கப்பலும் கப்பலில் உள்ளவர்களும் என்னவானார்கள் என்றே தெரிய முடியவில்லை. கப்பல் தண்டுகள் ஆங்காங்கே மிதந்தன. சிலவற்றில் மனிதர் தொத்திக்கொள்ள அரும்பாடுபட்டனர்.

கடல்மக்களுக்குக் கடலே உயிர். ஆனால் அதே கடல் நிலவுலக மக்களுக்குக் கூற்றுவனாக இருந்தது. இது கண்டு வேல்விழியின் உள்ளம் கலக்கம் அடைந்தது. அதே சமயம் அந்தக் கூற்றுவனைப் பொருட்படுத்தாது, கப்பலில் ஓடியாடித் திரிந்த