பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

19

அவை கால்களாகவே இயங்குபவை என்று அவள் கண்டாள். தவிர, அதைச் சுற்றி மீன்வாலின் நிறத்துடனேயே அழகிய இளநீல ஆடை புரண்டது. அவள் நடக்கும்போது வாள்கள் உள்ளூர அறுத்தன. ஆனால் ஆடையின் நெளிவு குழைவுகள் அவள் உள்ளத்தைக்கூட வசப்படுத்தின. அவள் வேதனையை மறந்து இன்பமாகக் கூவ முனைந்தாள். ஆனால் கூவ முடியவில்லை. அவள் குரலை ஆழ்கடலணங்கு வாங்கிக் கொண்டு விட்டாள் என்பதை அவள் உணர்ந்தாள்.

வேல்விழி இப்போது கடற்பரப்புக்கு விரைந்து வந்தாள். விரைந்து தூதுவத் தீவின் கரையை அணுகினாள். அப்போது இரவு அகன்றிருந்தது. கிழக்கின் செவ்வானம் கடல்மணலைப் பொன்னாக்கியிருந்தது. இளவரசன் செழுங்கோ கடற்கரை யிலேயே நின்றிருந்தான். அவள் அலைகளிலிருந்து நழுவிக் கரையில் சென்று உலவினாள். கதிரவன் ஒளிக் கைகள் கண்டு இப்போது அவள் நடுங்கவில்லை. ஏனென்றால், அவள் கரையில் கால் வைத்ததுமே, நிலவுலக நங்கையாகி விட்டாள்; ஆனால் கடலலைகளின் உணர்ச்சியும் மென்மையும் குழைவும் நெறிவும் அவள் உடலை விட்டகலவில்லை. ஆழ்கடலின் நீலம் அவள் கண்களில் புத்தழகுக் காட்டிற்று. பகலொளியை எள்ளி நகையாடும் நிலவொளிபோல் அவள் கரையில் உலவினாள்.

இத்தடவை, செழுங்கோவின் பார்வை அவள் மீதுபட்டது. அவன் ஆவலுடன் அவளை அணுகினான். வாள் அவளை அறுத்ததுபோல, அவன் முதற்பேச்சுக்கூட அவளைச் சற்று அறுத்தது. "நீ யார், எழிலரசி! ஆ! என் திருகுவளையைக் கண்டால், உன்னைக் காண வேண்டியதில்லை. அவள் அழகையே உரித்து எடுததுக் கொண்டு வந்ததுபோல நிற்கிறாய்; ஒருவேளை நீ அவள் தங்கையாய் இருக்கலாமோ?" என்றான்.

தன் அழகு அவனைக் கவர்ந்தது கண்டு அவள் மகிழ்ந்தாள். ஆனால் அதே சமயம் அதை இன்னொருத்தியின் அழகாக அவன் வருணித்தது கேட்டு அவள் புழுக்கமடைந்தாள்" அந்தோ! முதலில் அவரைப் பெற்றும், முதலில், என் அழகில் அவர் ஈடுபடாமல் இருக்க நேர்ந்துவிட்டது. அவர் நெஞ்சம் இன்னொருத்திக்கல்லவா உரிமைப்பட்டுவிட்டது!” என்று அவள் நடுங்கினாள்.