பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

அப்பாத்துரையம் - 32

அவர்கள்முன் எண்ணிக் காட்டினான். “உங்களுக்குப் பணம் பெரிது. ஆள் பெரிதன்று. இதோ உங்களுக்குச் செலுத்த வேண்டிய பொன்னை நான் தருகிறேன். பேசாது இவ்விடம் விட்டுச் செல்லுங்கள்” என்றான்.

கிடைக்காது என்று கைவிட்ட பொன் கிடைத்தது கண்டு முரடர் மகிழ்ந்தார்கள். அதைக் கையேந்தி வாங்கிக் கொண்டு, அவர்கள் அவ்விடம் விட்டு அகன்றார்கள். இளஞ்சாத்தன் அந்த உடலுக்கு ஆதரவுகாட்டி, அதை மாடத்தின் ஒருபுறம் அடக்கம் செய்தான். அச்சமயம் உயிரற்ற அவ்வுடல் அவனை நோக்கிப் புன்முறுவல் பூத்ததுபோல அவனுக்குத் தோன்றிற்று.

கடமை ஆற்றியதால் ஏற்பட்டகிளர்ச்சி அவன் உள்ளத்தில் துள்ளி ஆடிற்று. தந்தையின் ஆவி இதனால் மகிழ்ச்சியடைவது உறுதி என்று அவன் எண்ணினான். இறந்த மனிதன் முகம் அவன் மனக்கண்முன் நின்று புன்னகை செய்தது.

அன்று இரவு அவன் அகல்வெளியிலேயே துயில் கொள்ள நேர்ந்தது. அவன் இனிய கனவுகள் கண்டான். தந்தை முகம் அவன் கண்முன் தோன்றிற்று. அதில் களிப்பு ஒளி வீசிற்று. அருகே இறந்த மனிதன் உருவம் நின்றது. தந்தை அதைச் சுட்டிக் காட்டினார். “நன்று செய்தாய், குழந்தாய்! இனி இவர் உன் மாறா உயிர் நண்பர்” என்று தந்தை கூறினார். திடுமென இறந்த மனிதன் உருவம் மறைந்தது. எழில்மிக்க ஓர் இளவரசி தந்தையருகே நின்றாள். “இது உன் வருங்காலச் செல்வம்” என்று தந்தை சுட்டிக்காட்டினார். இளவரசி அவனுக்கு மாலை சூட்டினாள். அவன் தலையில் பொன்முடி கவித்தாள்.

காலையில் எழுந்ததும், இத்தோற்றம் முழுதும் கனவு என்று இளஞ்சாத்தன் கண்டாள். ஆயினும் அவன் உள்ளம் இதனால் மகிழ்ச்சி கொள்ளாமலில்லை. தந்தையின் நல் வாழ்த்தே இது என்று அவன் கருதினான்.

அவனிடம் இப்போது ஒரு செப்புக்காசும், வழிக்காகக் கொண்டுவந்த உணவும்தான் இருந்தன. தள்ளாத ஒரு கிழவன் அவனைக் கண்டு “ஒரு காசு இருந்தால் கொடப்பா, நான் ஏழை, உழைக்க முடியாதவன்” என்றான். இளஞ்சாத்தன் சிறிதும் சிந்திக்காமல், தன் செப்புக்காசை அவனுக்குக் கொடுத்தான்.