பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

அப்பாத்துரையம் - 32

வாரித் தன் படகில் சேர்த்தான். பின் முத்துக்களின் உயிரூற்றின் இருப்பிடமான பொன்மணியையும் படகில் கட்டிப் போடும்படி படகோட்டிகளுக்குக் கட்டளையிட்டான். இத்தனையும் இம்மெனுமுன் - பொன்மணி என்ன நிகழ்ந்தது என்று அறியுமுன் - நடந்தேறின.

அந்தக் கணமுதல் பொன்மணியின் வாழ்வு ஒரு சித்திர வதையாகத் தொடங்கிற்று. ஏனெனில் அவன் இயற்கையாக அழும்போது குவிந்த முத்துக்களைவிட மிகுதியான முத்துக்களை விளைவிக்க வணிகன் பொன்னாடை விரும்பினான். பொன் மணிக்கு நாள் தோறும், நாழிகை தோறும் கசையடிகள் தரப்பட்டன. அவன் வீறிட்டு, அழ அழ, முத்துக்கள் பெரிதாயின, முத்துக்கள் பெரிதாகுந்தோறும் கசையடிகள் முன்னிலும் கடுமையாகவும் முன்னிலும் பலவாகவும் பெருகின.

பொன்னாடையின் பேரவா அவன் அறிவைக் கூராக்கிற்று. அவனுக்குப் புதிய கருத்துக்கள் எழுந்தன. அழும்போதே முத்துமுத்தாய் அழுபவன், சிரித்தால் எப்படிச் சிரிப்பான் என்று பார்க்க விரும்பினான். அவனைச் சிரிக்க வைக்கும் பணியில் வேலையாட்களை ஊக்கினான். அவன் சிரித்த போது மாணிக்கம், மரகதம், வைரம், வைடூரியம் முதலிய மணிகள் சிதறுவது கண்டு வணிகன் வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டான். அதுமுதல் பொன்மணியின் சித்திரவதையின் போக்கு மாறிற்று. அவன் அழும்படியும் சிரிக்கும்படியும் மாறி மாறித் தூண்டப்பட்டான். முத்துக்களும் மணிகளும் உண்டுபண்ணும் உயிர்ச்சாலையாக அவன் மாறினான்.

உயிர்ச்சாலை குற்றுயிராக வாழ்வுக்கும் மாள்வுக்கும் டையே ஊசலாடிற்று என்று கூறத் தேவையில்லை. ஆனால் உணர்ச்சியற்ற வணிகனுக்காக அழும்போதும் சிரிக்கும்போதும் அவன் உள்ளம் தனியாகக் கிடக்கும் அண்ணி, அண்ணியின் குழந்தை பற்றித் தவித்தது. காணாமற் போன அண்ணனைப்பற்றி ஓயாது கவலைப்பட்டு மாழ்கிற்று.

உதவி தேடிச் சென்ற கணவனும் உதவி தேடச் சென்றவனை எதிர்பார்த்த பொன்மணியும் இல்லாமலே இளவேனிலும் அவள் இளமதலையும் காட்டில் கிடந்தனர்.