பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

அப்பாத்துரையம் - 33

வணிகன் அவளுக்கு ஆறுதல் சொல்ல முயன்றான். ஆனால், அவள் அவனிடம் கடுஞ்சீற்றம் அடைந்தாள்.

அவள் வேலைக்காரியாக இருந்தாலும், உயர்குடியைச் சேர்ந்தவள் என்று வணிகன் கண்டான். ஆகவே அவளை மதிப்பாக நடத்தி, அவள் மனம் போல இருக்கும்படி விட்டான். அவளாக மனம் மாறும்வரை அவளை எந்த வகையிலும் அவன் புண்படுத்த விரும்பவில்லை.

தாயைக் காணாத பிள்ளைகளும், மனைவியைக் காணாத கணவனும் துடிதுடித்தனர். ஆனால், விடுதிக்காரி அவளைப் பற்றிய விவரம் எதுவும் கூற மறுத்துவிட்டாள். அவளாக எங்கோ ஓடி விட்டாள் என்று அவதூறு கூறினாள். அத்துடன், அவர்களையும் விடுதியிலிருந்து வெளியே துரத்தினாள்.

“பட்ட காலிலே படும்: கெட்ட குடியே கெடும்” என்று ஒரு பழமொழி உண்டு. அரசன் வகையில் அது உண்மையாயிற்று. பிள்ளைகளை விட்டுக்கூட அவன் விரைவில் பிரிய வேண்டிய தாயிற்று. ஓர் ஆற்றை அவர்கள் கடக்க வேண்டி வந்தது. வெள்ளம் பொங்கிக் கொண்டிருந்தது.படகுகள், கிடைக்கவில்லை. அரசன் பிள்ளைகளை ஒவ்வொருவராக இட்டுச் சென் று கடக்க எண்ணினான். ஒரு குழந்தையை அக்கரை சேர்த்துவிட்டுத் திரும்பும் போது, நட்டாற்றில் ஒரு சுழி அவனை இழுத்துச் சென்றது.

குழந்தைகளைப் பார்த்து அவன் கதறினான். 'குழந்தைகள் அவனைப் பார்த்துக் கதறின. ஆனால், தந்தையின் கதறலையோ, குழந்தைகளின் துடிப்பையோ ஆறும் சுழியும் கவனிக்கவில்லை. குழந்தைகளின் கண்பார்வையிலிருந்து அரசன் மறைந்தான்.

சிறிது நேரம் சென்று ஒரு படகோட்டி தன் மனைவியுடன் ஆற்றோரமாகப் படகில் வந்தான். இருபுறமும் இரண்டு குழந்தைகள் அழுவதைக் கண்டு படகோட்டியின் மனைவி இரங்கினாள். படகோட்டி துணிந்து மறுகரையிலுள்ள குழந்தையையும் கொண்டு வந்தான். இரண்டு குழந்தைகளையும் தங்கள் பிள்ளைகளாகவே அவர்கள் வளர்ந்தனர்.

அரசன் ஆற்றில் அமிழ்ந்து விடவில்லை. நீரோட்டம் அவனை நெடுந்தொலை சென்று கரைப்பக்கமாக தள்ளிற்று.