பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23. புட்டிச்சாத்தன்

ஹவாய்த்[1] தீவில் ஓர் ஊரில் ஓர் ஏழை இருந்தான். அவன் பெயர் கீவ். அவன் ஓர் இளைஞன். அவனுக்குத் திடமான உடல் இருந்தது; அழகிய தோற்றம் இருந்தது; அந்தத் தீவிலுள்ள மக்கள் பேசிய மூன்று நான்கு மொழிகளையும் அவனால் திருத்தமாகப் பேசவும் எழுதவும் முடியும். அத்துடன் அவன் சுறு சுறுப்பானவன். ஆனால், இத்தனையும் இருந்தும், அவன் எப்படியோ ஏழையாகவே காலங்கழித்து வந்தான்.

அயல் நாடுகளுக்குச் சென்றால், தன்னைப் பிடித்த ஏழ்மை தன்னைவிட்டுப் போகக்கூடும் என்று அவன் எண்ணினான். தன் வீடு வாசல் எல்லாவற்றையும் விற்று இருநூறு வெள்ளிகளுடன் அவன் புறப்பட்டான். கொழும்பு, சென்னை, சிங்கப்பூர், ஷாங்ஹாய் முதலிய நகரங்களை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, அவன் சான்ஃபிரான் சிஸ்கோ’ நகரத்துக்குச் சென்றான்.

சான்ஃபிரான்சிஸ்கோவின் அழகு கீவின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. வீடுகளும் தெருக்களும் வாழ்வதற்காக மட்டுமல்ல; அழகு பார்ப்பதற்காகவும் கட்டமைக்கப்பட்டன என்று தோன்றிற்று. பகலெல்லாம் நகரைச் சுற்றிப்பார்த்தபின், மாலையில் அவன் நகர்ப்புறத்தில் உள்ள அழகிய துறைமுகத்தையும், அதையடுத்துள்ள குன்றையும் சுற்றி உலாவினான்.

துறைமுகம், சலவைக்கல்லால் செதுக்கி உருவாக்கப்பட்ட தெப்பக்குளம் போலக் கிடந்தது. அதில் தங்கி மிதந்த பெரிய கப்பல்கள், தூங்குகிற பெரு முதலைகளைப் போலவும், அவற்றினிடையே திரிந்த மற்றச் சிறு கப்பல்களும் படகுகளும் அவற்றைச் சுற்றி விளையாடும் குட்டி முதலைகளைப் போலவும் காட்சியளித்தன.

  1. 1