பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 221


கீவ் - துறைமுகத்திலிருந்து குன்றின் பக்கமாகச் சென்ற போது ஞாயிறு செவ்வண்ணமடைந்து கடல் நீரையெல்லாம் பொன்னாகவும், மலைக்குவட்டையெல்லாம் பவளமாகவும் மாற்றியிருந்தது. குன்றின் அடிவாரமெங்கும் பசுஞ் சோலை வனங்களாயிருந்தன. அவற்றிடையே அழகிய வேலைப் பாடமைந்த சிறு மாடங்களும் பெருங்கூடங்களும் இடமகன்ற அரண்மனைகளும் இருந்தன.

ஹவாயில் பல கட்டடங்களைப் பார்த்து அவன் பொறாமைப் பட்டதுண்டு. ஆனால், ‘அந்தக் கட்டடங்களுக்கு உரிய செல்வர்கள் இங்கே வந்தால், இந்த மாட கூடங்களைப் பார்த்துப் பொறாமைப்படாமலிருக்க முடியாது’ என்று கீவ் தனக்குள் கூறிக்கொண்டான்.

குன்றில் அவன் நெடுந்தொலை ஏறிவிட்டான். சோலை வனங்கள் முடிவுற்றுக் கடும்பாறை கண்ணுக்கெதிரே தோன்றிற்று. இனித் திரும்பவேண்டியதுதானே’ என்று தனக்குள் சொல்லிய வண்ணம் அவன் தன் பார்வையைத் திருப்பினான். அச்சமயம் அவன் கண்முன் கண்ட காட்சி அவனை அப்படியே மலைக்க வைத்துவிட்டது!

அரண்மனைகளைவிடச் சிறிய ஒரு மாளிகை அது! ஆனால் அதன் ஒவ்வொரு அங்குலத்திலும் அரண்மனைகளின் அழகு குழைத்து வைக்கப்பட்டிருந்தது. மற்ற அரண்மனைகளில் அவன் மணிகளைக் கண்டால் இதில் மணிகளின் மணியாகிய முத்தைக் கண்டான் என்று கூறலாம். அதன் தோட்டங்கள் சித்திரங்கள் போன்றிருந்தன. சித்திர வடிவம் தோன்றச் சிதறிப் பாய்ந்த ஊற்றுக்கள், அவற்றைக் கேலிசெய்யும் கலையின் சிரிப்பொலிகளாகக் காட்சியளித்தன. சுவர்கள் வண்ணப் பளிங்குகளாக ஒளிநிழல் வீசின. கதவுகளும் பலகணிகளும் வளைந்து வளைந்து செல்லும் மரப்படிகளும் அவற்றை வரவேற்கும் வாயில் வளைவுகளும் வண்ணப் பளிங்கு மேடையில் ஒசிந்து நெளிந்தாடிய ஆடலணங்குகளாக அவன் கண்களை மயக்கின.

“இந்த வீட்டுக்குரியவன் மண்ணுலகின் அவாக்கள் அத்தனையையும் தாண்டி அவற்றின் உச்சி மகுடத்தில் வீற்றிருப் பவனாகவே இருக்கமுடியும். இதன் அழகின் முன் ஹவாய் ஒரு துரும்பு. அமெரிக்கா முழுதும் இதன்முன் வெறும் இரும்பு.