பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 223

உருவம் “என்னால் நம்ப முடியவில்லை. இது என்ன குட்டிச் சாத்தான் கதைபோலல்லவோ இருக்கிறது?” என்றான் கீவ்.

“இது குட்டிச்சாத்தான் கதையல்ல தம்பி; ஆயினும் இதில் ஒரு புட்டிச்சாத்தனின் திருவிளையாடல் உண்டு. நீ இந்த வீட்டை வாங்கினாலும் சரி; வாங்கா விட்டாலும் சரி; இரண்டும் எனக்கு ஒன்றுதான்; இதை வாங்க விரும்பும் உனக்கும் ஒன்றுதான். அந்தப் புட்டிச்சாத்தனை நீ ஐம்பது வெள்ளி கொடுத்து வாங்கினால் இந்த வீடே உனக்குத் தேவையில்லை. இதைக் காட்டிலும் உயர்ந்த எத்தகைய வீடோ, தோட்டமோ, பொன்னோ, மணியோ, புனை மகுடமோ எது வேண்டுமானாலும் அந்தப் புட்டிச்சாத்தனிடம் கேட்டமாத்திரத்தில் உனக்குக் கிடைக்கும். நீ அதை வாங்கிக் கொள். ஐம்பது வெள்ளியையும் கொடுத்து வாங்கிக்கொள்,” என்றது.

குள்ள உருவம் தன் சட்டைப் பையில் கையை நுழைத்து ஒரு கரிய நிறமுடைய சிறு புட்டியை எடுத்து நீட்டிற்று.கீவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால், மேற்கு வானொளியில் குள்ள உருவம் புட்டியைக் காட்டிய போது, அதில் பாதரசத்தின் நிறத்தில் தலைகீழாக ஒரு சிற்றுருவம் தெரிந்தது. அது கீவை நோக்கிக் குறும்புச் சிரிப்புச் சிரிப்பதுபோலக் காட்சியளித்தது.

இப்போதும் கீவுக்கு ஒன்றும் தோன்றவில்லை. குள்ள உருவம் புட்டியைத் தலைகிழாகவும் நெட்டாகவும் பல நிலைகளில் திருப்பிக் காட்டிற்று. புட்டி எந்த நலையிலிருந்தாலும் உள்ளிருந்த பாதரசக் குறளி ஒரே நிலையில் தலை கீழாகத்தான் நின்றது!

குள்ள உருவம் புட்டியை நிலத்தின்மீது ஒங்கி வீசிற்று. அது தெய்வத்தால் செய்த பந்துபோல் துள்ளி அவன் கைக்கே திரும்பி வந்தது! அவ்வுருவம் அதைக் குன்றின் குவட்டை நோக்கி வீசி எறிந்தது. பின் சட்டைப் பையில் கையைவிட்டு அதை எடுத்துக் காட்டிற்று!

கீவ் இவ்வளவையும் வியப்புடன் நோக்கினாள்! ஆனால், “ஆயிரம் வெள்ளி கொடுத்தாலும் பெறமுடியாத இந்த வீட்டைத் தர இதனிடம் என்ன ஆற்றல் இருக்க முடியும்?” என்றான்.