பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 225


“இந்தப் புட்டியில் இருக்கும் புட்டிச்சாத்தனின் ஆற்றலுக்கு அளவே கிடையாது. இதை விலைக்கு வாங்கிய எவரும் அந்த ஆற்றலைப் பெற்றுத் தாம் விரும்பிய செல்வங்கள், உயர்வுகள், புகழ்நிலைகள் எவையானாலும் வட்டியில்லாமல் பெறலாம். இதை வாங்கியவர்கள் பலர் உலகத்தை ஆண்டிருக்கிறார்கள்! பெருஞ்செல்வத்தை மலைபோலக் குவித்து ஆரவாரம் செய்திருக்கிறார்கள்! பெறற்கரிய இன்பவாழ்வு பெற்றிருக்கிறார்கள். செயற்கரிய செயல்கள் செய்திருக்கிறார்கள்!

“ஆனால், இந்தப் புட்டிச்சாத்தன் தரும் கொடைகளுக்கு ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. அது மனித வாழ்வின் மட்டான, இயற்கை எல்லையாகிய அறுபது ஆண்டுக்குமேல் ஒருகணநேரம் கூட வாழ்வு அளிக்காது. அத்துடன், இதை வாங்கியபின் அந்த நாளைக்குள் விற்றுவிடாதவர்களுக்கும் ஒரு தண்டனை உண்டு. அந்த நாள் வருவதற்கு முந்தின நாளிலேயே இந்தப் புட்டிச் சாத்தன் அவன் உயிரைக் தன் கையில் பற்றி, என்றும் சாகாத நரகத்துன்பங்களுக்கு ஆளாக்கிவிடும்.

“எனக்கு இப்போது வயது ஐம்பத்தைந்துக்கு மேலாகி விட்டது. ஐம்பது ஆண்டு வந்தது முதல், இந்த அழகிய இன்பமாளிகையில் எனக்கு இருக்கை கொள்ளவில்லை. இந்த வீட்டின் அழகைக் காண்பவர்கள் யாராவது இதை வாங்கிக் கொள்ள மாட்டார்களா?’ என்று தான் நான் கவலைகொண்டு வாழ்கிறேன்.”

கீவ் இளைஞன். அவன் இன்னும் இருபத்து மூன்றாவது வயது தாண்டவில்லை. பேய், பொன்னுலகம், நரகம், கடவுள் ஆகிய எதுபற்றிய கவலையும் அவனுக்கு இல்லை. ஆகவே, அவன் குள்ள உருவமடைய கிழவன் சொல்லியது கேட்டு இரக்கப்பட்டான். உடன் தானே புட்டியை விலைக்கு வாங்கிவிட அவன் கையும் ஆகமும் அகமும் படபடத்தன. ஆயினும் ‘ஐம்பது வெள்ளிக்கு அதைக் கொடுக்க முன்வருவானேன்? விற்பதில் ஏன் இவ்வளவு துடிப்பு? இவ்வளவு ஏக்கம்? புட்டிச்சாத்தனின் அருஞ்செயல் கண்ட எவரும் எத்தனை வெள்ளி, எத்தனை பொன் கொடுத்தும் இதை வாங்கத் தயங்க மாட்டார்களே!’ என்று அவன் எண்ணினான். கிழவன் மேலும் பேசினான்;