பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
226 ||

அப்பாத்துரையம் - 33




“இவ்வளவு சிறந்த கருவூலத்தை விற்பதில் என்னகவலை என்று நினைக்கிறாய் போலத் தோற்றுகிறது. முதலாவதாக, உன்னைப் போன்ற இளைஞர்களுக்குத்தான் இவ்வளவு ஆர்வமும் துணிச்சலும் இருக்க முடியும். அத்துடன் இதை விற்பதற்கும் மற்றச் சரக்குகளை விற்பதற்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. பொதுவாக வாங்கிய விலையைவிடக் கூடுதல் விலைக்கே எவரும் எதையும் விற்க விரும்புவார்கள். இதனால் பொருள்களின் விலை கைமாறுந்தோறும் ஏறுகிறது.

இந்தப்புட்டியின் செய்தி இதற்கு நேர்மாறானது. இதை வாங்கின விலைக்கு ஒரு காசு கூட்டி விற்றாலும், அதே விலைக்கு விற்றாலும் வாங்கியவனிடமிருந்து விற்றவனிடமே இது திரும்பி வந்து விடும். ஆகவே, இதை விற்கும் ஒவ்வொரு தடவையிலும் இதன் விலை குறைந்து கொண்டே போகிறது.

“தொடக்கத்தில் இதன் விலை நூறாயிரம் பொன்னுக்கு மேலிருந்ததாகக் கேள்வி; மன்னர்களுக்கும் இளங்கோக்களுக்கு மிடையே இது கைமாறிற்று; ஆனால், விலை குறையக்குறைய இது என் போன்ற ஏழைகளிடமும் வந்து வாழ்வளிக்கத் தொடங்கிற்று; நான் இதை ஐம்பத்தொரு வெள்ளிக்குத்தான் வாங்கினேன்.என்னிடங்கூட அவ்வளவு வெள்ளிதான் இருந்தது; வாங்கினபின் நான் ஐந்தாண்டுகளுக்கு முன்வரை கவலைப் பட்டதேயில்லை; எத்தனை ஆயிரமாயிரம்பொன் வேண்டு மானாலும், வேறு என்ன பொருள் வேண்டுமானாலும் புட்டிச் சாத்தன் எனக்குத் தந்தது. ஆனால், இவ்வளவு குறைந்த விலைக்கு எப்படிக் கொடுப்பது என்றுதான் கவலைப்படுகிறேன்.”

இதைக் கேட்டதும் கீவ் முன்னைவிட உரக்க வாய்விட்டுச் சிரித்தான். பிறகு, “எங்கே, முதலில் எனக்கு ஒன்றிரண்டு வெள்ளி கொடு, கூடுதல் கொடுத்து அது உம்மிடமே திரும்புகிறதா, பார்ப்போம்.” என்றான்.

கிழவன் கைநிறைய வெள்ளிகள் கொடுத்தான். கீவ் ஐம்பத்திரண்டு வெள்ளிகள் எண்ணிக் கொடுத்து விட்டுப் புட்டியுடன் பத்தடித் தொலைவு சென்றான். ஆனால் சட்டைப்பையில் கைவிட்டபோது, புட்டி அதில் இல்லை; அது கிழவன் கையில் இருந்தது.