பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 227


புட்டிச்சாத்தனின் மீது இப்போது கீவுக்குக் கட்டுக் கடங்காத ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.பொழுது சாய்வதற்குக் கூட அவனால் பொறுக்க முடியவில்லை. அதற்குள் புட்டிக்கு விலைகொடுத்து வாங்கி அதன் மூலம் தான் விரும்பிய செல்வங்களைப் பெற அவன் துடித்தான். ஐம்பது வெள்ளிகளும் குள்ளக்கிழவனிடம் சென்றன. புட்டியும் புட்டிச்சாத்தனும் அவன் சட்டைப்பையில் ஒட்டிக்கொண்டன.

முதலில் புட்டியைப் பயன்படுத்தும் ஆர்வத்தைவிட, அதன் அருஞ்செயல்களைக் காணும் ஆர்வமே தீவுக்கு மிகுதியாக இருந்தது. அவன் புட்டிக்காகத் தான்கொடுத்த ஐம்பது வெள்ளியும் திரும்பத் தன்னிடம் வரவேண்டும் என்று கேட்டான். சட்டைப்பை உடனே பளுவாயிற்று. அதனுள்ளிருந்த பணத்தை எடுத்து எண்ணினான். சரியாக ஐம்பது வெள்ளி இருந்தது.

அவன் புட்டியை உடைத்துப் பார்த்தான். அது உடையவில்லை, நெட்டிவாங்கி ஒன்றைக் கொண்டு மூடியைத் திறக்க முயன்றான். நெட்டிவாங்கிதான் வெளி வந்தது; மூடியில் அதன் தடமே காணவில்லை.

புட்டியைத் தெருநடுவில் வைத்துவிட்டுச் சென்றான். முதல் திருப்பம் திரும்புமுன் புட்டியின் தலை கையில் முட்டியது. புட்டி பையில் கிடந்தது.

புதிதாக வாங்கிய விளையாட்டுப் பொருளுடன் சிறு குழந்தை விளையாடுவதுபோல அவன் விளையாடினான். அதன் அருஞ்செயலிலுள்ள அவன் ஆர்வம் அத்தனை பெரிதாயிருந்தது!

நகரிலுள்ள ஒரு பழம்பொருள் வணிகனிடம் சென்று அப்புட்டியைக் காட்டி அதற்கு நூறு வெள்ளிவிலை கேட்டான். முதலில் அதைப் பார்த்துக் கடைக்காரன் சிரித்தான். பின் எப்படித் திருப்பினாலும் பாதரசக் குறளி தலை கீழாயிருக்கும் புதுமையைப் பார்த்தபின் அறுபது வெள்ளி கொடுக்க இசைந்தான். கீவ் புட்டியைக் கொடுத்துவிட்டு அறுபது வெள்ளியை வாங்கிக் கொண்டு நடந்தான். “வாங்கியதை விடக் கூடுதலான விலைக்குக் கொடுத்துவிட்டேன். அது திரும்பி வருகிறதா பார்ப்போம்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். கப்பலில் ஏறியபின் அவன் சட்டைப்பையில் துழாவினான். பணத்துடன் புட்டியும் இருந்தது!