பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
234 ||

அப்பாத்துரையம் - 33



படிமையையல்ல, உயர் படிமையையே என்பதை இதனால் அவள் ஊகித்தாள். அத்துடன் கீவ் ஏழ்மையுருவில்வெளியேறி உலகம் சுற்றுவதாக அவள் கேள்விப் பட்டிருந்தாள். ஆகவே, உருக்கரந்து வந்தவன் கீவாகவே இருக்கவேண்டும் என்பதை அவள் உய்த்தறிய முடிந்தது.

கீவ் அவளை அணுகி, "என் உண்மைப் படிமையை அறியாமலே நீ என்னை நையாண்டி செய்ததைக் கேட்டேன் உண்மைப் படிமையை உணர்ந்தால் இன்னும் உன் மதிப்பில் நான் தாழ்வடையவே முடியும். நான் உன்னிடம் அளவில்லா அன்பு கொண்டு விட்டேன். ஆனாலும், உன் விருப்பமில்லாமல் நான் உன்னை மணம் செய்ய உளங்கொள்ளவில்லை. உன் தந்தையும் உன் விருப்பப்படியே நடப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகவே, விருப்பமில்லா விட்டால், தெளிவாகக் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன். நான் என் நம்பிக்கையை ஏற்கெனவே இழந்துவிட்டதால், நீ உன் கருத்தை மனம்விட்டுக் கூறத் தயங்க வேண்டாம்” என்றான்.

‘உங்கள் விருப்பமே என் விருப்பம்’ என்று மணிச் சுருக்கமாகத் தன் கருத்தை அவள் தெரிவித்தாள். இதைக் கேட்டதும் அவன் வியப்படைந்தான். ஆனால், அவன் மகிழச்சிக்கு எல்லையில்லை. விரைவில் திருமண ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அவளை வந்து காண்பதாகக் கூறி, அவன் கோனாவிலுள்ள தன் மாளிகைக்குத் திரும்பினான்.

கோக்குவா கீவைப் பார்ப்பதற்குமுன், அவன் மாளிகை பற்றிக் கேள்விப்பட்டு, அதற்காகவே அவனை நாடியிருந்தாள். ஆனால், அவனைக் கண்டபின் மாளிகையில்லாமலேகூட அவனை மணக்க அவள் உள்ளம் துடித்தது. இரண்டுநாள் அவனைச் சந்தித்தபின், அவன் இல்லாமல் அவள் வாழ்வு ஒரு கணமும் சுவைப்படவில்லை. அவனுக்காக அவள் தன் தாய் தந்தை, வீடு, வாசல், சுற்றம் நட்பு யாவும் துறந்து செல்ல நேர்ந்தாலும் தயங்கியிருக்க மாட்டாள்.

கீவுக்கும் இப்போதுதான் வாழ்வில் முதல் தடவையாக ஆர்வம் ஏற்பட்டது போலிருந்தது. கலைமாளிகையின் கனவு, கோக்குவா அவனை மனித உணர்ச்சி உடையவனாக்கி, அவன் மனித உள்ளத்தின் கனவுருவாய் நின்றாள்.