பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
236 ||

அப்பாத்துரையம் - 33



முழுவதும் அவன் சிரிக்கவில்லை. பாடவில்லை, இரவில் அவன் உறங்கவில்லை. மேலும் கீழும், வலமும் இடமும், முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு அவன் கவலையுடன் திரிந்தான். அத்துடன் ஹோனானாப் பக்கம் அவன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

இந்தப் புது மாறுதலுக்குக் காரணம் என்னவென்று அறியாமல் பணியாட்கள் மீண்டும் திகைத்தனர். கலை மாளிகைக்குச் சுண்ணமும் நறுமணப் பொருள்களும் கொண்டு வந்தவர்களுக்குத் திடீரென்று ‘ஒன்றும் வேண்டாம்’ என்ற உத்தரவு பிறந்தது. திருமணத்துக்குரிய பெண் ஏதேனும் வெறுப்பாக நடந்து கொண்டாளோ என்று யாவரும் நினைத்தனர்.

ஆனால், இந்த மாறுதலால், மிகுதி மனச் சோர்வும் துன்பமும் அடைந்தவள் கோக்குவாவே. அவள் நாளும், நாழிகையும், கணமும் எண்ணி எண்ணி அவனை எதிர்பார்த்துக் கண்பூத்துக் காதும் அடைபட்டாள். எதைக் காண்பதிலும், எதைக் கேட்பதிலும், எந்தச் செயலில் ஈடுபடுவதிலும் அவள் உள்ளம் பற்றுக் கொள்ளவில்லை.

கீவின் இத்தனை மாறுதலுக்குக் காரணம், குளிக்கும் சமயம் அவன் உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு துணுக்குறத்தக்க எண்ணமேயாகும். இன்பக் கோட்டைகளிடையே அவன் தன் உடல் மீது சவுக்கார நுரையையும் நீரையும் வாரி இறைத்துக் கொண்டிருந்தான். அப்போது காலின் ஒரு பகுதியில் அவன் ஒரு வெள்ளைப் புள்ளியைக் கண்டான். அவன் பார்க்கப் பார்க்க அது விரிவடைவது போலவும் வெள்ளை படர்ந்துகொண்டு வருவது போலவும் அவனுக்குத் தோற்றிற்று. மீளாப் பெருநோய்க்குத் தன் அழகிய உடல் இரையாக இருந்ததாக அவன் திடுமென நினைத்தான். பாட்டு திடீரென நின்றதற்கும், அவன் மகிழ்ச்சி முற்றும் மாறியதற்கும் இதுதான் காரணம்.

ஒருவனுக்கு எவ்வளவு செல்வமும் மதிப்பும் பணியாட்களும் இருந்தும் என்ன பயன்? காதலில்லாத இடத்தில் அத்தனையும் வீண்’ என்று கீவ் முதலில் கருதியிருந்தான். இப்போதோ காதல் அவன் வாழ்வில் கனியமுதூறக் காத்திருந்தது. ஆனால், ‘காதலும் செல்வமும் இருந்துதான் என்ன பயன்’ என்று