பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 241


அவன் இப்போது கவலை தீர்ந்தான். ஆனால், பாடவில்லை. இனித் தன் காதலியைப் பெற்றுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மகிழ்ச்சி எழுந்தது. ஆனால், காதலுக்காக மீளா நரகத்தையும் விலைக்கு வாங்க வேண்டி வந்தது என்ற எண்ணம் அந்த மகிழ்ச்சிக்கு ஒரு கரைகட்டி இருந்தது.

அந்தச் சிறு புள்ளி தந்த வாழ்க்கைத் தத்துவத்தைத் திருத்திப் புட்டி மற்றொரு வாழ்க்கைத் தத்துவத்தை அவனுக்கு அறிவுறுத்தி விட்டது. 'பகலும் இரவும் தனித்தனி வராது; சேர்ந்தேவரும். அது போல இன்பமும் துன்பமும் இணைந்தே பெறவேண்டும். இணைத்து ஏற்கத் தயங்கக் கூடாது’ என்பதே இந்தப் புதுத் தத்துவம்.

இது, ஆறுதலளிக்கும் தத்துவம் ஆனால்; ஆரவாரித்து ஆர்ப்பரிப்பதற்குரிய தத்துவமல்ல.

கீவின் முதல் பேரவாவைப் போலவே. இரண்டாவது பேரவாவும் புட்டிச்சாத்தனால் நிறைவேறிற்று. அவன் கோக்குவாவை மணம் செய்து கொண்டு புதுமனைவியுடன் கலைமாளிகையில் குடிபுகுந்தான். கலை மாளிகையில் முதல் தடவையாக வாழ்வின் களை ஒளி வீசிற்று.

கோக்குவா பச்சைக்கிளிபோல் மாளிகையெங்கும் பறந்தாள். அவளுடைய குயிலினுமினிய குரல் மாடிப் பலகணிகளிலிருந்து தென்றலில் மிதந்து குயில்களுடன் இன்பப் போட்டியிட்டது. கீவும் அடிக்கடி அவள் பாடலுடன் சேர்ந்து பாடுவான். அவள் காதல் நிறைவிலிருந்து பொங்கிய மகிழ்ச்சியால் அவன் புட்டிச்சாத்தனைப் பெரிதும் மறந்திருந்தான். எப்போதாவது தனியாயிருக்கும் நேரம் அந்த நினைவு வந்தாலும் அவன் காதற்கடமைகள் அதைத் துரத்தியோட்டின.

குயிலின் பாட்டுக்கும் ஒரு காலமும் இடமும் உண்டு. பச்சைக்கிளி எப்போதும் பறந்துகொண்டே இராது கோக்குவாவின் கன்னி இளமைக் கட்டிளமையாயிற்று கட்டிளமை முற்றிளமையாக முதிர்ந்தது. அவள் கால்கள் வரவரநிலத்தில் பரவவும் பதியவும் தொடங்கின. அவள் குரல் மழலைத் தன்மை இழந்தது. ஆடல் பாடல் இன்ப அமைதியாக நிலவிற்று. ஆனால், இம்மாறுதல்களை அவள் அறியவில்லை.