பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
242 ||

அப்பாத்துரையம் - 33



அவள் உள்ளத்தின் காதல் இளங்குருத்தாயிருந்து இப்போது பசுமரமாகி ஆணி வேரிட்டுக் கீவின் வாழ்வில் ஆழ்ந்தது.

கீவ் கோக்குவாவினுடன் முன்போலவே கூடிக் குலவிப் பேசியிருந்தான். “ஆனால்,, அவள் அப்பால் சென்ற போதெல்லாம் தன் காதலுக்காகத் தான் செய்த பெருந் தன் மறுப்பும் அதன் பளுவும் அவனை அழுத்தின. அதன் கோர நினைவுகளால் அவன் அடிக்கடி கண்ணீர்விட்டுக் கலங்குவான். பல இரவுகள் அவன் தனியே சென்று தன் தலையணைகளைக் கண்ணீரால் துவைப்பான். ஆனால், இவற்றை, மனைவி காணாமல் மறைத்து, கழுவிய கண்களுடன் புன்முறுவலை வருவித்துக்கொண்டு அவளிடம் பேசுவான். இம்முயற்சிகளால் தன்னைப் பிடித்த பெருங்கவலை தன் மனைவியின் மாசுமறுவற்ற வாழ்வினைப் பற்றிவிடவில்லை என்று அவன் அமைந்திருந்தான்.

கீவின் நெற்றியில் ஏற்பட்ட அடங்கிய கவலையின் கோடுகளைக் கோக்குவாவின் கண்கள் முற்றிலும் காணாமலில்லை. அத்துடன் அவன் வாட்டமும் உடல் நலிவும் அவள் உள்ள அமைதியைத் தட்டி எழுப்பின. கீவ் பிரிந்துசென்று தன் பெருங்கவலையில் ஆழ்ந்தது போலவே, அவளும் அடிக்கடி பிரிந்து சென்று அதன் காரணத்தை அறிய முனைந்தும் அதுபற்றி உள்ளங் கசிந்தும் வருந்தலானாள்.

ஒருநாள் கீவ் வீட்டில் நுழையும்போது சந்தடி இல்லாமலிருந்தது. யாருமில்லை என்று எண்ணி அவனும் குரல் கொடுக்காமல் உள்ளே வந்தான். தன் அறைக்கு அருகில் ஏதோ குழந்தை தேம்பித்தேம்பி அழுவது போன்ற குரல் கேட்டு எட்டிப் பார்த்தான். கோக்குவா நிலத்தில் விழுந்து புரண்டு அழுது கொண்டிருந்தாள்.

அவன் அவளை வாரி எடுத்து மடிமீது கிடத்தித் தடவிக் கொடுத்த வண்ணம், “இந்த வீட்டில் நீ அழுவதற்கு என்ன தவறு நடந்திருக்கக் கூடும்? நீ மகிழ்ச்சியாயிருப்பதற்காக நான் உயிரைக் கொடுக்கவும் ஒருக்கமாக இருக்கிறேன். என்னிடத்தில் சொல்லப்படாதா?” என்றான்.

அவன் அவள் கண்களைத் துடைத்தான்.