பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 249

ஒரு நாள் கீவ் வெளியே சென்று மகிழ்ச்சியுடன் உலாவ விரும்பினான். மனைவியையும் தன்னுடன் அழைத்தான், அவள் ‘உடம்புக்கு நலமில்லை’ என்று மறுத்தாள்.

உண்மையில் அவள் உடம்பு மட்டுமல்ல, உள்ளமும் வெந்து புழுங்கிற்று. ஆனால், அவள் உள்ள நிலைமை அறியாத கீவ் உள்ளூரப் பொருமினான். “நான் நன்மை அடைந்ததை இவள் உள்ளூர விரும்பவில்லை. இவள் பரப்பிய காதலெல்லாம் இவ்வளவுதான் போலும்!” என்று அவன் கறுவிக் கொண்டான்.

அடுத்த நாள்முதல் கீவ் குடிக்கத் தொடங்கினான். குடிவெறியில் அவன் தன் புட்டி, தன் பணம், தன் மனைவி என உளறினான்.குடித்திருந்த நண்பன், ‘பணத்தைப் பெண்களிடம் நம்பி வைத்திராதேடா, பாவி! பெண்கள் எல்லாரும் மோசக்காரிகள். என்றான்.

புண்பட்ட கீவ் உள்ளத்தில் குடிவெறியில் கூட இந்தச் சொற்கள் பதிந்தன. அன்றுமுதல் இரவில் அவன் திடுமென எழுந்து கோக்குவா என்ன செய்கிறாள் என்று உளவறிய முயன்றான்.

அவன் கண்ட அந்த உளவு அவன் அமைதியை மீண்டும் கலைத்தது. அவன் கண்டுபிடித்தது அவள் மோசத்தையல்ல, அவள் பாசத்தை! நள்ளிரவில் புட்டியை வைத்துக் கொண்டு முன் தான் மனம் நொந்ததுபோல அவள் இப்போது நொந்து புலம்பிக் கொண்டிருந்தாள்.

கீவுக்கு இப்போது புட்டியின் விற்பனைபற்றிய கோர உண்மை விளங்கிற்று, ‘அந்தோ! எனக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த மனைவியிடம் நான் என்ன நன்றி கெட்டதனமாக நடந்துகொண்டேன்! அவள் பத்தரை மாற்றுத் தங்கம். அவள் கேடடையக் கூடாது. நான் பாவி! சண்டாளன்! அந்தக் கேட்டை மீண்டும் நானே அவளறியாமல் என்மீது ஏற்றுக்கொள்வேன்’ என்று அவன் தனக்குள் கூறிக்கொண்டான். தான் உண்மையைக் கண்டு கொண்டதாகவே அவன் மனைவிடம் காட்டிக் கொள்ளவில்லை தான், திருந்தி விட்டதாகவும் காட்டிக்கொள்ளவில்லை. வழக்கம் போலக் குடிப்பதற்கு அவன் பணம் கேட்டு வாங்கிக்கொண்டு போனான். ஒரு காசை மாற்றிக் கையில் வைத்துக் கொண்டான்.