6.மட்டி மருதாயி
பூங்கழனி என்ற ஊரில் நார்மடி என்று ஓர் இளைஞன் இருந்தான். சிறு பிள்ளையாய் இருக்கும்போதே அவன் தாய் தந்தையரை இழந்தான். ஆயினும் அவன் நல்லறிவும் நற்குணமும் நல்லுழைப்பும் உடையவனாயிருந்தான். இதனால், வயது நிரம்பும் முன்பே அவன் சிறிதளவு பணம் திரட்டினான். ஒரு சின்னஞ்சிறு வீடும் ஒரு காணி நிலமும் வாங்கினான்.
"நார்மடி திறமையுடையவன்; செட்டானவன்; கொஞ்சப் பணத்தில் எவ்வளவோ நல்ல வீடு கட்டியிருக்கிறான்; இந்த வீட்டுக்கேற்றபடி பதுமைபோல அழகான மனைவி கிடைத்தால் இன்னும் நன்றாய் இருக்கும்” என்று அவன் உறவினர், நண்பர்கள் பேசிக்கொண்டனர்.
இச்சொற்கள் நார்மடியின் உள்ளத்தில் பதிந்துவிட்டன. ஆனால், பதுமைபோன்ற வடிவழகி எங்கும் கிடைக்கவில்லை. அவன் காடுமேடாய் அலைந்து திரிந்தான்.
தொலைவிலிருந்தே ஓர் ஊரின் அழகு அவனைக் கவர்ந்தது. அவ்வூருக்கு நீர்மடி என்று பெயர். நேரிமலை என்ற மலையின் மடியில் இருப்பதுபோல அது காணப்பட்டது. அதன் பின்னே, ஊரின் பெரிய கோயிலும் மலைச் சிகரமும் இருந்தன. முன்னே ஓர் அகன்ற ஏரி இருந்தது. மலை முகட்டிலுள்ள சுனைகளி லிருந்து மாலை போல இரண்டு ஆறுகள் ஏரியில் வந்து விழுந்தன. ஏரியில் நீர் நிரம்பியபின், அதிலிருந்து புதிதாக மற்றோர் ஆறு புறப்பட்டு மலையை மூன்று முறை வலமாகச் சுற்றியோடிற்று.
நார்மடி இவ்வழகிய ஊரில் சிலநாள் தங்கினான். அங்கே அவன் ஒருநாள் பதுமைபோன்ற அழகுடைய ஒரு பெண்ணைக் கண்டான். தான் தேடிவந்த பெண் அவள்தான் என்ற உறுதி அவனுக்கு உடனே ஏற்பட்டு விட்டது. அவளைப்பற்றிய தகவல்கள் அறிய முற்பட்டான்.