IV. வழிமனை வாணன் கதை
காடம்பியும் மாடம்பியும் தாங்கள் தங்கள் கதையை மறந்து வேடம்பியின் கதையைப் புகழ்ந்து பாராட்டினர். “எதிரிகளே என் கதையின் சிறப்பை ஒத்துக்கொண்டபோது, நடுவர் தீர்ப்பே தேவையில்லை. ஆகவே கணக்குத் தீர்ப்பு என் பொறுப்பென்று முடிவு செய்யக் கோருகிறேன்" என்றான் வேடம்பி, ஆனால் வழிமனை வாணன் இப்போது எதிர்த்திட்டமே தொடங்கினான். “உங்கள் மூவர் கதைகளையும்விடச் சிறந்த கதையை நான் கூற முடியும். அதன் தீர்ப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன். என் கதை சிறந்ததாயிருந்தால், முழுக்கணக்கின் மூவிரட்டித் தொகையை மூவருமாகச் சேர்ந்துதர வேண்டும்" என்றான்.
வழிமனைவாணன் பேரவாவைச் சுட்டிக் காட்டுவது போல நண்பர் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனாலும், அவன் கதைபற்றிய முடிவிலேயே கலவரம் தொடங்கி நழுவுவது என்று உறுதி கொண்டு அவர்கள் நடுவர் கருத்தை ஏற்றனர்.
வழிமனைவாணன் தன் கதையைத் தொடங்கினான்:
இந்த வழிமனைக்கு அருகிலுள்ள திருக்குறுங்குடியிலே ஒரு செல்வக் குடியில் மடப்பிடி என்று ஓர் எழிலாரணங்கு இருந்தாள். அவளுக்குத் தந்தை இல்லை. ஆனால், அவள் தாய் அவளைச் செல்வமாக வளர்த்து வந்தாள். அவர்கள் குடி, ஊரிலேயே முதல் மதிப்புடையது. அவர்கள் செல்வத்துக்கும் குறையவில்லை. அத்தனை செல்வமும் குடியின் ஒரே பெண்ணாகிய மடப்பிடிக்கே உரியதாயிருந்தது. ஆகவே, செல்வ ளைஞர் எத்தனையோ பேர் அவளை விரும்பி மணஞ்செய்ய முன் வந்தனர். ஆனால், எக்காரணத் தாலோ அந்நங்கை அச் செல்வருள் எவரையும் ஏற்க ஒருப்படவில்லை.