1. அரங்கன் திருவிளையாடல்
மாமாங்கம் என்ற பேரூரிலே சட்டநாதர் என்ற ஒரு பெரியவர் இருந்தார். அவர் கல்வியறிவில் வல்லவர். ஆனால் தருக்கு மிக்கவர். எவரையும் சட்டப் பொறியிலும் வாய்ப் பொறியிலும் மாட்டி அவர்களை அலைக்கழிப்பதில் அவர் மிகவும் வல்லவர். அவர் பொறிகளில் அகப்பட்டுச் செல்வம் முழுவதும் இழந்தவர்கள் பலர். வாழ்நாள் முழுவதும் தொல்லைப் பட்டுத் தவித்தவர்கள் பலர். அவர் திசையில் செல்லவே நாளடைவில் எவரும் துணியவில்லை. இவ்வளவு படித்த மனிதர் இத்தனை ஈர இரக்க மற்றவராயிருக்கிறாரே என்று பேசாதவர்கள் கிடையாது.
அந்த ஊருக்கு இரண்டு உடன் பிறந்தார்கள் பிழைப்பை நாடி வந்தார்கள். அவர்களுக்குச் சட்டநாதர் குணம் பற்றி எதுவும் தெரியாது. அவர் பெருஞ்செல்வர் என்பதையும், அவர் வீட்டில் வேலைக்கு எப்போதும் ஆள் தேவை என்பதையும் மட்டும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர்.
உடன் பிறந்தார்களில் மூத்தவன் பெயர் அங்கன். அவன் நல்ல உழைப்பாளி. ஆனால் சிறிதும் சூது வாதற்றவன். இளையவன் பெயரோ அரங்கன்.அவன் சிறிது சோம்பலுடையவன். ஆனால் அவன் உலக அனுபவ மிக்கவன். அண்ணனின் நல்ல குணம் கண்டு, அவன் மனமார அவனிடம் மதிப்பும் பற்றுதலும் உடையவனாயிருந்தான்.அண்ணனுக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டால், அவன் தயங்காமல் அதில் தலையிட்டு அவனைப் பாதுகாப்பது வழக்கம்.
கு
அங்கன் ஒருநாள் சட்டநாதரிடம் சென்று, 'எனக்கு ஏதாவது வேலை கொடுக்க முடியுமா?' என்று கேட்டான்.