பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




188

|-

அப்பாத்துரையம் - 34

சரிசமமான அளவில் போட்டியிட்டன. ஒரு கட்சி செய்யும் எந்தத் தீர்மானத்தையும் மற்றக் கட்சிமுழு மூச்சுடன் எதிர்க்காமல் இராது. ஒன்றின் நன்மை, மற்றதன் அப்பழுக்கற்ற நன்மையாகவும் இருந்தது. ஆட்சி முறையில் மட்டிலுமன்றி. உணவு, உடை, வழிபாட்டு வணக்கமுறை ஆகிய எல்லாவற்றிலும் ஒவ்வொரு கட்சியும் கூடிய மட்டும் மற்றக் கட்சிக்கு மாறுபட்டே நடக்க அரும்பாடுபட்டது. இந்நிலையில் நகருக்கு வரும் அரசியலாளரை ஒரு கட்சி வரவேற்பதனால், மற்றக் கட்சி எதிர்க்காமல் இருக்க முடியாது. ஒரு கட்சியின் பாராட்டால் வரும் புகழை மறு கட்சியின் எதிர்ப்பால் இகழாக்க எந்த அரசியலாளரும் விரும்பவில்லை.

எதிரெதிர் கட்சிகளின் பண்புகளுக்கேற்ப அவற்றின் தலைவர்களும் எதிரெதிர் பண்புகளின் உருவங்களாகவே அமைந்தனர். பெரும்படிக் கட்சியின் தலைவர் ஏழுவேலி ஏகம்பவாணர் என்ற பெருநிலக்கிழார். அவர் கிட்டத்தட்ட ஆறடி உயரம் உடையவர். ஆனால், பக்கத்துக்குப் பக்கமாக அளந்தாலும், முன்பின்னாக அளந்தாலும் உடலின் அகலம் கிட்டத்தட்ட அதே ஆறடி இருந்ததால், அவர் உருவம் அவ்வளவு நெடிய உருவமாகத் தோற்றாது.அவருக்கு ஆடை உடுப்புத் தைப்பவனுக்குத்தான் அந்த உடலின் நீள அகலங்களின் எல்லை நன்கு தெரிந்திருந்தது. ஏனெனில், முட்டளவான வேட்டியும் குறுஞ் சட்டையும் அவர் அணிவது வழக்கமானாலும், வேட்டியுடன் வேட்டி, துணியுடன் துணி நீளத்தில் வேறாகவும் அகலத்தில் வேறாகவும் ஒட்டுப் போட்டே அவருக்கு உடை உருவாக்க வேண்டியிருந்தது. அவர் மேலாடை நான்கு பெண்டிர் முழு ஆடைக்குப் போதிய நீளமுடையதாயிருந்தது.

ஏகம்பவாணருக்கு நேர்மாறாக ஆரவாரக் கட்சியின் தலைவர் நெல்மண்டி நித்திலச்செல்வரோ ஐந்தடிக்கு மேல் உயரமுடைய வரல்லர். அத்துடன் உடலின் பருமன் அத்தனை அங்குலங்களே தானோ என்னும்படி அது ஒடுங்கி மென்மையுடையதாய் இருந்தது. அவரது வெண்பட்டுடைகளும், தோளளவு குறுகக் கத்தரித்து அழகுபடச் சீவிவிட்ட, அவரது தலைமுடியும் கிட்டத்தட்ட ஓர் அழகிய பொம்மையின் தோற்றத்தையே அவருக்குத் தந்திருந்தன. முகமும் கன்னமும் கவிந்து செவிகளுடன் பேசத் துடிதுடித்த மீசைகளும், கருநீல வண்டுகள்போல மினுங்கிய கண்களும்