(216) ||_
அப்பாத்துரையம் - 34
பகைவர், பொறாமைக்காரர் தொகையும் பெருகலாயிற்று. கொம்மனும், பொம்மனும் இப்பகைக் கும்பலுக்குத் தலைமை தாங்கினர்.
பகைக் கும்பலின் விடாமுயற்சி, இறுதியில், மன்னன் மனத்தையும் கயத்தாற்றுப் பெருமக்கள் அவையினர் பெரும்பான்மையோரின் மனத்தையுமே மாற்றிற்று.
பொதுமக்கள் குடியுரிமைக்கும் வணிகப் பெருமக்கள் தனியுரிமைக்கும் கோமக்கள் ஆட்சியுரிமைக்கும் கேடுகள் பல சூழ்ந்ததாக அவன்மீது மன்றத்தில் குற்றச்சாட்டுகள் பல எழுந்தன. இவற்றுக்காகத் தூக்குமேடை ஏறும்படி தீர்ப்பும்
விதிக்கப்பட்டது.
தூக்கை எதிர்நோக்கி அவன் சிறையிலிருந்தபோதும், தூக்கு மேடையில் தண்டனை எதிர்நோக்கி நின்றபோதும் குறும்புகள் யாவுமே அவனிடமிருந்து விடை பெற்றுக் கொண்டதாகவே தோன்றிற்று.அதே சமயம் அவன் முகத்தில் வெறுப்பில்லை; சோகமில்லை; அமைதியே உருக்கொண்டது போல அவன் தோற்றமளித்தான்.
தண்டனையடையுமுன் இறுதியாக விடைபெறும் கட்டம் வந்தது. அப்போது அவன் என்ன பேசுவானோ என்று பலர் கவலையுடன் நோக்கியிருந்தனர்.
ஆனால், அவன் பேச்சில் அமைதி மட்டுமன்றி, முற்றிலும் மாறுபட்ட ஓர் எதிர்பாராத தொனியே தென்பட்டது.
'மன்னர் பெருமானே! மன்பேரவையோரே! என் நாட்டுப் பெருமக்களே!
‘எனக்கு இட்ட தண்டனை முழுவதும் நேர்மையானது. அதை நான் மனமார, மனமகிழ்வுடன் ஏற்கிறேன்.
'உங்களிடமிருந்து இறுதி விடை பெற்றுச் செல்லுமுன் நான் நாட்டுக்கு இப்போதாவது ஏதேனும் நன்மை செய்து விட்டுப் போக விரும்புகிறேன்.
'குற்றம் செய்பவர்கள் நாட்டுக்குத் தீங்கிழைத்ததனாலேயே தண்டனை பெறுகிறார்கள்; ஆனால், அந்தத் தண்டனையிலும் கூட நாட்டுக்கு அவர்கள் ஒரு தீமை செய்யும்படி நேர்கிறது.