14. ஊறுகாய்ப் பட்டாளம்
குற்றால மலைச்சாரலில் தேனருவிக் கரையோரத்தில் எலுமிச்சம்பழத் தோட்டமொன்று பச்சைப் பசேலென்று செழித்து வளர்ந்திருந்தது. அதன் ஒரு கோடியில் ஒரு தனி எலுமிச்ச மரம் ஒதுங்கி நின்றிருந்தது.
'அருவியிலே சென்று குளிப்போம்!' என்று கூறித் திரும்பியது போல, அது தேனருவியை நோக்கிச் சாய்ந்திருந்தது. ஆனால், அடுத்த கணமே, ‘ஏன் கசத்திலேயே சென்று பாய்ந்து குதித்தாடுவோமே!' என்ற புதிய கருத்துக் கொண்டு பாய எழுந்தது போல, அதன் உச்சிக் கிளை கசத்தை நோக்கித் தலைகுப்புறச் சாய்ந்து கவிந்திருந்தது.
தோட்டத்தில் அந்த மரத்துக்கென்று ஒரு தனி உயிரே இருந்ததாகத் தோன்றிற்று. அது ஒரு தனி இயல்பும் தனி வளமும் உடையதாய் இலங்கிற்று.
மற்ற மரங்களில் காய்கள் பச்சையாகவும் கனிகள் மஞ்சளாகவும் இருந்தன. பெருமாங்காயின் அளவு கடந்து அவை வளரவில்லை. சுவையிலும் பொதுவாக எலுமிச்சம் பழத்துக்குரிய நறும்புளிப்புச் சுவையே அவற்றுக்கு இருந்தது. ஆனால் அருவிக்கரைத் தனி மரத்தில் மட்டும் காய்கள் பசு நீலமாகவும், கனிகள் செழும் பசும்பொன் வண்ணமாகவும் இருந்தன. அவை சிறு தேங்காய் அளவில் பருத்து வளர்ந்திருந்தன. அத்துடன் அவை எலுமிச்சம் பழத்துக்குரிய நறும்புளிச் சுவையுடன் நாரத்தைக்குரிய சிறு கசப்பும், கடாரங்காய்க்குரிய சிறுகார்ப்பும், நெல்லிக் கனிக்குரிய சிறு துவர்ப்பினிப்பும், கொடி முந்திரிப் பழங்களுக்குரிய சிறு புளிப்பினிப்பும் கலந்த கூட்டுச் சுவை நலம் உடையவையாய் அமைந்திருந்தன.