சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3
[221
இனத்தை அழிக்கும் சிறிய எமன் வடிவங்களே என்பதை அது அறிந்திருந்தது. சிறுவர் சிறுமியரின் கல்லும் கோலும் தன் தோழர் தோழியர்களின் உடலைச் சிதைத்துக் குருதி கொப்பளிக்க வதைத்த காட்சியை அது என்றும் மறக்க முடியவில்லை.
இவ்வழிவுகள் எல்லாவற்றையும்விடக் கவலை தரும் செய்திகளையும் பெருங்காய் தன் இனத்தின் வாழ்வில் கண்டிருந்தது.
தோட்டத்தின் காய்கனிகளுக்குப் பொதுவாகவும், தனி மரத்துக் காய்கனிகளுக்குச் சிறப்பாகவும் தென்பாண்டி நாடெங்குமே பெருமதிப்பு இருந்து வந்தது. தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம், தூத்துக்குடி, மதுரை முதலிய பல்வேறு நகரங்களின் சந்தைக் கடைகளில் அவற்றின் பருவ வருகைக்காகச் செல்வரும் வணிக மக்களும் ஏங்கிக் காத்துக் கிடந்தனர். வந்த காய்கனிகள் உடனுக்குடன் செலவாய்விடுவதால், பருவந்தோறும் அடுத்த பருவ வரவை எதிர்நோக்கி அவர்கள் தவமிருந்தனர். இந்நிலையில் குத்தகைக் காரர் ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து தடவை, சில சமயம் ஆண்டுக்கு ஆறு அல்லது ஏழு தடவை தோட்டத்தின் வளத்தை வாரித் திரட்டி வண்டி வண்டியாக அந்நகரங்களின் சந்தைகளுக்கு அனுப்பிய வண்ணமாக இருந்தார்கள்.
தன்னுடன் பிறந்து வளர்ந்த மற்றக் காய்கனிகள் இவ்வாறு பருவந்தோறும் ஆயிர நூறாயிரக்கணக்காக எங்கே அள்ளிக் கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பெருங்காய் அறிய முடியவில்லை. அவை என்ன ஆயின என்பதும் அதற்குத் தெரிய வழி இல்லாமல் போய்விட்டது. ஆனால், அவை எங்கே சென்றாலும் என்னவானாலும், அவற்றின் வழி மற்ற அழிந்த பழங்களுடனொத்த மீளா வழியே என்பதை அது அறிந்து கொள்ள நெடுநாளாகவில்லை.
அழிவுக்கு அது ஆளாகவில்லை. ஆனால், ஒவ்வொரு படியிலும் அது அழிவை எதிர்நோக்கித் துடிதுடித்திருந்தது. துடிப்பின்மேல் துடிப்பாக அதன் வாழ்வே ஓர் இனத் துடிப்பாயிற்று.