(230)
||–
அப்பாத்துரையம் - 34
சிணுங்கினாள். பரிமாறிய நங்கை கட்டுச் சோற்றுடன் இருந்த மாங்காயில் ஒரு துண்டு கொடுத்தாள். ஆனால், சிறுமி அப்போதும் அடம் பிடித்தாள். 'எனக்கு மாங்காய் எதற்கு? எங்கம்மா வந்திருந்தால் எலுமிச்சங்காய் ஊறுகாய் கொண்டு வந்து தந்திருப்பாளே, எவ்வளவோ அமுதமாயிருக்குமே' என்று அவள் அழுதாள்.
இதுகேட்ட எலுமிச்சங்காய்க்கு ஒருபுறம் தன்னை யறியாமல் பெருமித மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், அடுத்த கணம் மாண்ட தன் இனத்தவர் உருவமெல்லாம் அதன் கண்முன் வந்து நிழலாடிற்று.
சிறுமியின் அழுகையை அமர்த்த எண்ணிய நங்கை 'இவளுக்கு எங்கிருந்தாவது யாராவது எலுமிச்சங்காய் ஊறுகாய் செய்து கொண்டு வரப்படாதா?' என்று கேட்டுச் சிரித்தாள்.
மற்றொரு நங்கை ஏதோ நினைத்தவளாய்த் திடுமென எழுந்து சென்றான்.
தேக்கிலையை எடுத்த இடத்தில் அதனடியில் ஏதோ ஒரு பெரிய காய் கிடந்ததை அவள் கவனித்திருந்தாள். இப்போது அவள் ஓடிச் சென்று அதை எடுத்து வந்தாள். அதைக் கையில் வைத்துப் புரட்டி மோந்து பார்த்தாள். 'அடியம்மா, நம்ம இராசாத்திக்கேற்ற இராச எலுமிச்சங்காய் பார்த்தாயாடி!' என்றாள்.
தமிழகத்தின் தலைசிறந்த எலுமிச்சம்பழத்தை அக்காட்டுத் திடலிலே காண மங்கையர் யாவரும் வியப்படைந்தனர். ஆனால், அழுத சிறுமி அழுகை நிறுத்தவில்லை அழுகையிடையே சிரித்தாள். 'பார்த்தாயா, இவ்வளவு நல்ல எலுமிச்சங்காய் இருக்க, எனக்கு மாங்காயைத் தந்து ஏமாற்றப் பார்த்தீர்களா! எங்க அம்மா இருந்தால்...!
நங்கை அவள் வாயைப் பொத்தினாள்.
‘என்னடி, எந்த அம்மாவும் உனக்கு இத்தனை பெரிதான நல்ல எலுமிச்சங்காய் தேடித் தரமாட்டாளடி! நான் எப்படியாவது ஊறுகாய் பண்ணித் தருகிறேன். நீ சற்றுப் பொறு என்றாள்.