பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12 ||.

அப்பாத்துரையம் - 34

அடித்தான். பிள்ளைகள் கோவெனக் கதறிக் கொண்டு ஓடின. “விரைவில் ஓடிவிடுங்கள்; இல்லாவிட்டால், மீதித் தலைகளையும் என் தலைவர் வந்து உடைத்துவிடுவார்" என்று அவன் உரக்கக் கத்தினான்.

கூக்குரல் கேட்டுச் சட்டநாதரும் நாதாங்கியும் ஓடோடி வந்தனர். ஆனால், அவர்கள் வருமுன் ஊர் திரண்டுவிட்டது. பிள்ளைகளின் தாய் தந்தையர் வந்து “பாவி, சண்டாளா!” என்று திட்டத் தொடங்கினர்.

பிள்ளைகளின் தாய்தந்தையருக்கு அவர்கள் ஏதோ சொல்லிக் கை நிறையப் பணம் தந்து அமைதிப்படுத்தினர்.

சட்டநாதருக்கும் நாதாங்கிக்கும் அரங்கனை விட்டு ஒழிவது எப்படி என்பதே கவலையாய்ப் போய்விட்டது.

அவனை நீக்குவதற்கு மாறாக, அவனுக்குத் தெரியாமல் அயலூர் சென்றுவிட அவர்கள் எண்ணினர். இரவோடிரவாக அவர்கள் எழுந்து நடந்து சென்றனர்.

ஒருநாள் முழுதும் நடந்தபின் அவர்கள் ஒரு குளத்தருகில் உட்கார்ந்தனர். ஒரு வகையில் அரங்கன் தொல்லை ஒழிந்தது. என்று சட்டநாதரும் அவர் மனைவியும் மகிழ்ச்சியுடன் உணவு மூட்டையை அவிழ்த்தனர்.

அவர்கள் எதிர்பாராமல், ஒரு பெரிய வாழை இலையுடன் அரங்கன் அவர்கள் முன் வந்துநின்றான். ஒப்பந்தப்படி அவனுக்கு இலை நிறைய உணவு தந்துவிட்டு, இவர்கள் மீந்ததை உண்ண வேண்டியதாயிற்று.

சட்டநாதர் தொலைவிலிருந்த தன் மாமனார் வீடு செல்லவே எண்ணியிருந்தார். ஆனால், அவ்வளவு தொலை அவராலும் நாதாங்கியாலும் நடக்க முடியவில்லை. ஆகவே வழியில் அவர் குதிரை வாங்கினார். கணவனும் மனைவியும் அதில் ஏறிச் சென்றனர். அரங்கன் நடந்து பின்னே சென்றான்.

இரண்டு நாள் பயணத்துக்குள் குதிரை மிகவும் களைப்படைந்தது. ஊர்ப்புற விடுதியொன்றில் அவர்கள் தங்கியிருந்தனர். குதிரையை அரங்கனிடம் கொடுத்து அதைச் சிறிது உலவ விட்டு, பின் தேய்த்துக் குளிப்பாட்டி வரும்படி அவனை அவர் அனுப்பினார்.