பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 3

37

சின்னத்தம்பி தன் துடுக்குத்தனத்தை எண்ணிஎண்ணி வருந்தினான். தன் பேராவலுக்கே அடிப்படையான தன் மாட்டுச் செல்வங்களைக் கட்டிக்கொண்டு அழுதான். ஆனால் இனி அழுது பயன் இல்லை என்பதை உணர்ந்து அவன் ஆறினான்.

ரண்டு மாடுகளின் தோலையும் அவன் உரித்து உலரவைத்து எடுத்துக் கொண்டான். நிலத்தை உறவினரைப் பார்த்துக்கொள்ளும்படிவிட்டுவிட்டு, தோலை எங்கேனும் விற்கப் புறப்பட்டான். இரண்டு மாட்டுத் தோல்களையும் அவன் ஒரு சாக்கிலிட்டுத் தூக்கிக் கொண்டு போனான்.

கண்காணாத ஏதேனும் ஊருக்குப் போய்விட வேண்டும் என்பது தவிர, அவனுக்கு வேறு திட்டம் எதுவும் கிடையாது. ஆகவே, அவன் ஓர் அடர்ந்த காட்டு வழியில் சென்றான். பகல் முழுதும் நடந்து சென்றும், காடு கடந்த பாடில்லை. இரவின் குளிரும் கொடுவிலங்குகளின் கூக்குரல்களும் அவனை அச்சுறுத்துத் தொடங்கின. பாதையிலிருந்து சற்று விலகியிருந்த ஒரு சிற்றூரை நோக்கித் திரும்பினான்.

அந்தச் சிற்றூரின் வீடுகள் எல்லாமே சிறு குச்சு வீடுகள். உள்ளே இருப்பவருக்கே அவை இடம் பற்றாதவையாகத் தோன்றின. ஆகவே, அவற்றில் அவன் தங்கிடம் கோர நினைக்க வில்லை. ஒரே ஒரு வீடுதான் செல்வ வளமுடையதாகத் தோற்றிற்று.அதுவே அவ்வூர்ப்பெரிய தனக்காரன் வீடு. அதனுள் இருளில் நெடுந்தொலை ஒளி வீசிய விளக்கொளியும் தெரிந்தது. நல்ல உணவு வகைகளின் மணமும் தொலைவில் தென்பட்டது. சின்னத் தம்பி ஆவலுடன் சென்று கதவைத் தட்டினான்.

ஆரவாரமாக ஆடையணிந்த ஓர் அணங்குதான் வந்து கதவைத் திறந்தாள். வந்தது ஓர் ஏழை வழிப்போக்கன் என்று கண்டதே அவள் முகம் கடுகடுத்தது. தங்கிடமும் உணவும் வேண்டும் என்று அவன் கேட்டதும் அவள் சீறி விழுந்தாள். 'இது வீடு. சத்திரமல்ல. வேறெங்காவது போய்த் தொலை' என்று கடுமையாகக் கூறிவிட்டு, அவன் கண் முன்னாலேயே கதவைத் தடாலென்று அடைத்து விட்டுச் சென்றாள்.

அவன் வீட்டில் வெளிப்புறத்திலேயே எங்காவது சிறிது ஒதுக்கமான இடம் பார்த்துத் தங்க எண்ணினான். சுற்று முற்றும்