40
அப்பாத்துரையம் - 34
பெரியதனக்காரனுக்கும் சின்னத்தம்பிக்கும் வீட்டணங்கு
பழைய அமுது படைத்தாள். ஒரு காரத் தொகையலைத் தவிர அமுதுக்குத் துணைக்கறி எதுவுமில்லை. குடியானவனுக்குப் பசி மிகுதியானதாலும், அதுவே அவன் வழக்கமான உணவாத லாலும், அவன் சுவையுடன் உண்டான். சின்னத்தம்பிக்குப் பசி மிகுதியாகத்தான் இருந்தது. ஆனாலும், சற்றுமுன் வகை வகையான உண்டி சிற்றுண்டிகளைக் கண்டதனால் அவ் எளிய உணவு உட்செல்ல மறுத்தது.
மாட்டுத்தோல் வைத்திருந்த சரக்கு அவன் காலடியிலேயே கிடந்தது. அவன் கால்கள் இச்சமயம் அதன் மீது தற்செயலாக அழுத்திற்று. அது ‘கிர், கிர்' என்று இரைந்தது. சமயத்துக்கேற்ற புதுக் கருத்து அவனுக்குத் தோற்றிற்று. அவன் தோலை மீட்டும் அழுத்தினான். அது மீண்டும் இரைந்தது. அதை வாயடக்கி உறுக்குபவன்போல, 'பேசாமலிரு!' என்றான்.
'தம்பி, பைக்குள் என்ன இருக்கிறது?' என்றான் பெரியதனக்காரன்.
'அது ஒன்றுமில்லை. வெறும் சாக்குத்தான்' என்று செய்தியை மறைப்பதுபோலச் சின்னத்தம்பி பாவனை செய்தான்.
பெரியதனக்காரன் ஆர்வம் கிளர்ந்தெழுந்தது. “ஒன்று மில்லை என்றால் அது குரல் கொடுப்பானேன்? நீ 'பேசாமலிரு' என்று சொல்வானேன்? சும்மா என்னிடம் சொல்லு. சொன்னால்தான் நான் சாப்பிடுவேன்" என்றான்.
'உங்களிடம் சொல்வதற்கென்ன? உங்களைப்போல நல்லவரிடம் சொல்லலாம்!' என்ற பீடிகையுடன் சின்னத் தம்பி தொடங்கினான். 'இதில் ஒரு மந்திரவாதியால் அடைக்கப்பட்ட ஒரு குறளித் தெய்வம் இருக்கிறது. அது தன்னை வைத்துப் பேணுகிறவர்களிடம் நடந்தது. நடக்கிறது, நடக்க இருக்கிறதை யெல்லாம் அறிந்து சொல்லும். அதன் வழக்கம் போல், இப்போதும் ஏதேதோ சொல்லிற்று. அவ்வளவுதான்' என்றான்.
அவனை முதலில் புறக்கணித்துக் கடுமையாகப் பேசிய அணங்குக்குக்கூட இப்போது அவனிடம் அச்சம் பிறந்தது. பெரியதனக்காரன் ஆர்வம் முன்னினும் பதின் மடங்காயிற்று.