பக்கம்:அப்பாத்துரையம் 34.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 3

55

பாட்டியைக் காணாமல் தேடிய அவன் உறவினர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். 'பாட்டிக்கு என்ன ஆயிற்று, எங்கே கொண்டுபோனாய்?' என்று நச்சரிக்கத் தொடங்கினர்.

வாழ்க்கையில் முதல் தடவையாக அவன் தன்னைச் சமாளித்துக்கொண்டான். 'பாட்டிக்குத் திடீரென்று நள்ளிரவில் வலி கண்டதால், அடுத்த ஊர் மருத்துவரிடம் எடுத்துச் சென்றேன். வழியிலேயே உயிர் போய்விட்டது. ஆகவே திரும்ப வேண்டியதாயிற்று!' என்று சமயத்துக் கேற்ற கதை கட்டினான். பாட்டி அடக்கம் செய்யப்பட்டாள்.

‘சின்னத் தம்பியின் குறும்புகளால் மாட்டுச் செல்வமிழந்து, பாட்டியையும் இழந்து, மானமும் மதியும் கெட்டுவிட்டேன்.இனி அவன் தப்ப வழி கொடுக்காமல், ஆழ்ந்த திட்டமிட்டு அவனை ஒழித்துவிடவே வேண்டும்' என்று பெரிய தம்பி தனக்குள் கூறிக்கொண்டான்.

அவன் தன் கோபத்தை வெளியில் காட்டவில்லை.

சின்னத்தம்பி இப்போது ஏமாந்தான். தன் வழக்கமான முன் கருதலை மறந்தான்.

திடுமென ஒருநாள் மாலையில் பெரியதம்பி சின்னத் தம்பியைப் பிடித்து. ஒரு பெரிய சாக்கினுள் இட்டு அடைத்து விட்டான். எதிர்பாராத இந்தச் செயலால் சின்னத்தம்பி உண்மையிலேயே நம்பிக்கையிழந்தான். 'இத்தனை நாளும் திறமையால் ஏமாற்றினேன். இப்போது என்னைக் காப்பாற்றுவர் யார்?' என்று மனமிடிவுற்றான்.

இருட்டத் தொடங்கியதும் பெரிய தம்பி அவனைத் தோளில் தூக்கிக் கொண்டு ஆற்றை நோக்கிச் சென்றான்.

வழியில் ஒரு நாற்சந்தி குறுக்கிட்டது.

சாக்கின் பளுவால் அவன் முற்றிலும் களைத்து போனான். சாக்கைக் கீழே வைத்துவிட்டுச் சற்று இளைப்பாற எண்ணினான்.

கூப்பிடு தொலைவில் ஓர் அருந்தகம் இருந்தது. சிறிது சூடான சுடுநீர் அருந்தினால், குறை வேலையைத் தெம்புடன் முடிக்கலாம் என்று அவன் கருதினான்.