பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(178)

||-

அப்பாத்துரையம் - 35

வாலியும் இச்சமயம் தன் அரைத்தூக்கத்தில் அவளுக்கு உதவி செய்வதுபோல வாலைச் சற்று இறுக்கி நெகிழ்ந்தது.

“வானுலகத்தில் எல்லாரும் பூசை செய்பவர்களே. ஒரே ஒரு கடவுள்தான் உண்டு. ஆகவே, எல்லாரும் நம்மைப்போல்தான் வேட்டி சேலை கட்டியிருப்பார்கள்.” என்றான் அவன்.

அவளுக்கு மனங்குளிர்ந்தது. அவன் இடுப்பை அவள் கைகள் மெல்ல அணைத்துக் கொண்டன.

வண்டார்குழலிக்கு மெல்லிய நிலவில் தூக்கம் வந்துவிடும் போலிருந்தது. ஆகவே, அவள் பேசத் தொடங்கினாள்.

“அம்மணி, நம் வீட்டில் திருவிளையாடற்புராணம் வாசிக்க வருவாரே. அந்தத் தேசிகர் சொன்னார்- வானுலகத்தில் இலந்தைப்பழம் எல்லாம் மாம்பழத்தவ்வளவு பெரியதாயிருக்கும் என்று. தேங்காய் எல்லாம் பூசணிக் காயளவு பெரிதாயிருக்கு மாம்!” என்றாள்.

இந்தச் சுவைமிகுந்த செய்தியைக் கேட்டுக் கொண்டு மங்கையால் சும்மா இருக்கமுடியவில்லை. அவள் மீண்டும் கணவன் இடுப்பில் இழைந்து குழைந்த வண்ணம் அவனைப் பேச்சுக்கு இழுத்தாள்.

"அத்தான், அத்தான்! கேட்டீர்களா சேதியை? சித்தி கூறுகிறாள். வானுலகத்தில் தேங்காய் பூசணிக்காயளவு இருக்குமாம்” என்றாள்.

அவன் தன்னை மறந்து சிரித்தான்.

அவளுக்குப் பேச்சில் தெம்பு தட்டிற்று.

"தேங்காய் பூசணிக்காயளவு இருந்தால், அதற்குள் வாலியைவிட்டு அடைத்துவிடலாம்” என்றாள்.

அவன் முதலில் சிரித்தான். பின், "நீ இப்படியே பேசிக் கொண்டிருந்தால், ஆனைக்கு ஒருவேளை கோபம் வந்துவிடும். சித்தியையும் நீ கூட்டிக் கொண்டு வருகிறாய் என்று நான் அதனிடம் சொல்லவில்லை” என்றான்.

அவள் சிறிது பல்லைக் கடித்துக் கொண்டாள். ஆயினும் அவளால் முற்றிலும் தன் உள்ளத்தில் எழுந்த ஒரு சுவைகரமான கருத்தை யாத்திரை முடியுமுன் கூறாமலிருக்க முடியவில்லை.