பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

அரசன் முகத்தில் புன்னகை தோன்றிற்று.

23

“என் அருமைக் கிளியே! உன் அறிவுக்கு உன் பெருந்தன்மையே இணை. உன் பெருந்தன்மைக்கு உன் அறிவே இணை. அரசியரைக் காட்டிக் கொடுக்காமல் பேசி விட்டாய். ஆனால், நீ நன்றி கெட்டவன் என்று அவர்கள் கூறியதை எப்படியோ அறிந்து அதற்கு மறுப்பும் கூறிவிட்டாய்.

"போகட்டும். என் கடனைத் தீர்க்க நீ நிரம்பக் காத்திருக்க வேண்டாம். இப்போதே தீர்க்கலாம். அரசியரைவிட அழகான பெண்ணைப் பார்த்திருக்கிறேன், என்றாயே! எங்கே? யார்?.."

அரசன் முடிப்பதற்குள் கிளி இடைமறித்தது!

"போதும் அரசே! எங்கே? யார்? இந்தக் கேள்விகள் எங்கெங்கெல்லாமோ சென்றுவிடக் கூடும். அதெல்லாம் பெண்களுக்காகச் சொன்னது; உங்களுக்காக அல்ல;” என்று கிளி நயம்படப் பேசிற்று.

மன்னன் நெஞ்சம் கிளியின் நேர்மையை ஒத்துக் கொண்டது. ஆயினும், அவன் முகம் சிறிது சுண்டிற்று. கிளி இதைக் கவனித்தும் கவனியாததுபோல இருந்தது.

கிளியின் பெருந்தன்மையை அரசியர் அறியவில்லை. அறிந்தாலும் அதை அவர்கள் உணரத்தக்கவர்களாய் இல்லை. கிளி அகப்பட்டதனால் வந்த கோபத்தில், அவர்கள் அரசன் மீதே சீறினார்கள். "கிளி இருக்கு மட்டும் நாங்கள் உங்கள் ண்மனையருகில் இருக்க மாட்டோம். நகரிலேயே தங்க மாட்டோம்” என்று கூறி வெளியேறினார்கள்.

மன்னன் மனம் இடிவுற்றது. கிளியை விட்டுப் பிரிய அவன் மனம் ஒப்பவில்லை. ஆனால், அரசியர் பிரிவுக்காகவும் அவன் வருந்தினான். அவன் சோர்வு கண்டு கிளி இரக்கம் கொண்டது.

“மன்னனே! என் நன்றியை இப்போது உங்களுக்கு காட்டத் தடை இல்லை. அரசிமாரே அந்தத் தடையை அகற்றி விட்டார்கள். மேலும் உங்கள் குடிக்கு ஒரு குலக் கொழுந்து இல்லை. அது அரசியருக்கும் ஒரு குறைதான். அவர்கள் என்னை மதித்தாலும் மதிக்காவிட்டாலும், நான் அந்தக் குறையை அகற்ற எண்ணுகிறேன்” என்றது கிளி.