பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

41

தேனிலந்தை மங்கைப் பருவம் அடைந்த போது, அவள் ஈடும் எடுப்புமற்ற எழிலரசியாக விளங்கினாள்.

அந்த நாட்டின் அரசன் கண்டீரன் என்பவன். அவனுக்கு மல்லன், மாறன், மருதன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். மூவரும் கிட்டத்தட்ட அடுத்தடுத்த வயதுடையவர்கள். மூவருமே தற்செயலாகத் தேனிலந்தையைக் கண்டு, அவளை மணம் செய்து கொள்ள விரும்பிக் கடும் போட்டி இட்டனர்.

சிலகாலம் அப்போட்டியினால், ஊரே கலகலத்து விட்டது. தேனிலந்தையை ஏற்கெனவே வெறுத்திருந்த சீமாட்டி மாந்தை, இப்போட்டி கண்டு இன்னும் பொருமினாள். ஆயினும், இலஞ்சியின் மாயத்தை எதிர்க்க அஞ்சி, அவள் தன் சீற்றத்தை அடக்கிக் கொண்டாள்.

திடுமென ஒருநாள் இலஞ்சி படுக்கையில் வீழ்ந்தாள். இரண்டொரு நாட்களுக்குள் அவள் நோய்ப்பட்டு உயிர் நீத்தாள். மாந்தை இந் நிகழ்ச்சியைப் பயன்படுத்தி, தேனிலந்தை மீது பழி வாங்க முனைந்தாள்.

இலஞ்சியிடமிருந்து தேனிலந்தையும் மாயம் கற்றிருந்தாள். ஆனால், தேரா இளங்கன்னியாகிய அவள் மாயத்துக்கு, மாந்தை அஞ்சவில்லை.

அரசிளஞ்செல்வர்களின் போட்டி பூசல்களைக் கண்டு தேனிலந்தை ஒருநாள் மகிழ்ந்திருந்தாள். அச்சமயம் பார்த்து மாந்தை தன் மாயத்தால் அவள் வீட்டை ஒரு குட்டையாக்கி, அவளை ஒரு பச்சைத் தவளை யாக்கினாள்.

மாயங்களை எதிர்க்கும் திறமுடையது காதல் திறம். தவளை யுருவிலே இருந்த தேனிலந்தைக்கு இது தெரியும். ஆகவே, தன்னை நாடி ஒரு காதலன் வரும் வரை, அவள் மாந்தையின் மாயத்துக்குள் கட்டுப்பட்டு இருந்தாள்.

அவள் தவளையானதை அரசிளஞ்செல்வர்களால் அறிய முடியவில்லை. திடுமென அவள் மறைந்ததால், அவர்கள் மலைத்து நின்றனர். போட்டிக்குக் காரணமான காதலி மறைந்தபின், அவர்கள் போட்டியை நிறுத்தித் தம் அரண்மனை திரும்பினர்.