பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

அப்பாத்துரையம் - 35

அது தன் உள்ளத்தின் கனவுக்காட்சியானால், அதில் தேனிலந்தையின் வடிவம் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். தேனிலந்தையில்லாமல் சூழல் மட்டும் கனவில் வருவது இயல்பன்று. ஆகவே, அது நனவுக்காட்சிதான் என்று அவன் துணிந்தான்.

அவன் ஒரு கல்லின்மேல் சாய்ந்து உட்கார்ந்தபடியே தனக்குள்ளாகப் பேசிக் கொண்டான். “தேனிலந்தையே! நீ திடீரென்று எங்கே மறைந்து விட்டாய்? எனக்கு என் தந்தையின் அரசு வேண்டாம்; நீ கிடைத்தால் போதும். தந்தை கேட்டபடி நூறுமுழ அகல நீளமுள்ள மென்துகிலைத் தேடித்தான் நான் புறப்பட்டேன். ஆனால், என் உள்ளம் அதை நாடவில்லை, உன்னைத்தான் நாடுகிறது” என்றான்.

"கிடைக்காத தேனிலந்தைக்காகக் கிடைக்கக் கூடிய அரசை ஏன் விடுகிறான்?” என்று எங்கிருந்தோ அருகில் ஒரு குரல் எழுந்தது. 'பேசியது யார்?' என்று காணாமல் மருதன் சுற்றிச் சுற்றிப் பார்த்தான்.

குரல் மீட்டும் பேசிற்று. அது மற்ற தவளைகளைவிடச் சற்றுப் பெரிதான ஒரு பச்சைத் தவளை. உண்மையில், அது தவளையாக மாற்றப்பட்ட - தேனிலந்தையே. ஆனால், இது மருதனுக்குத் தெரியாது.

"இளவரசே! தேனிலந்தை இப்போது உயிருடனிருந்தால், உம் காதல் உறுதிகண்டு, மகிழ்வாள். ஆனால் அவள் இல்லை. எனினும், நீர் அரசு பெற நான் உதவக் கூடும்” என்றது தவளை.

தவளை பேசுவது கண்டு அவன் வியந்தான். அத்துடன் அதன் குரல் தவளையின் குரல்போல அருவருப்பாக இல்லை. ஆயினும், ஒரு தவளை தனக்கு உதவக்கூடும் என்பதை அவன் நம்பவில்லை.

“நீ புதுமை வாய்ந்த ஒரு தவளைதான். ஆனால், எனக்கு நீ எப்படி உதவ முடியும்? இறந்துவிட்ட என் காதலியை நீ கொண்டுவர முடியுமா? அல்லது என் தந்தை கேட்டபடி. கணையாழிக்குள் நுழையத்தக்க நுண்மையான நூறு முழம் உள்ள மென்துகிலைத்தான் தர முடியுமா?” என்று அவன் வெறுப்புடன் கூறினான்.