பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

61

அவனறியாமல் அவள் பக்கம் இழுத்தது. “ஆரணங்கே!" என்று ஒரே ஆர்வ அழைப்புடன் அவன் அவளை நோக்கி வந்தான்.

புதிய ஆளைக் கண்டதும் அவள் திடுக்கிட்டாள். மறுகணம் அவள் நீரில் குதித்தாள். இளவரசன் படுக்கையண்டை நிற்கும்வரை அவள் அச்சம் தீரவில்லை. செம்மணியுடன் வெளியேறிய ஆராயாச் செயலுக்காக அவள் மனம் வருந்தினாள். தன் ஆர்வத்தையும் கடிந்து கொண்டாள். ஆனால், இப்போதும் அவள் தன் பிழையை இளவரசனிடம் சொல்லத் துணியவில்லை. அந்தப் பிழைக்கு இனி இடம் தருவதில்லை என்று மட்டும் உறுதி செய்து கொண்டாள்.

அவள் திடீரென்று நீருக்குள் சென்று மறைந்தபோது எழுமுடி ஏமாற்றமடைமந்தான். அவள் எப்படியும் நீரிலிருந்து வெளிவரத்தானே வேண்டும் என்று அவன் காத்திருந்தான். இரவு முழுவதும் சென்றது; யாரும் வரவில்லை; அவள் மனிதப் பெண்ணல்ல, நீர் நங்கையாகவே இருக்க வேண்டும் என்ற உறுதி அவனுக்கு ஏற்பட்டது. ஆயினும், அவன் உள்ளம் அவள் அழகை விட்டு வேறு எதிலும் நாடவில்லை. அவன் அதே சிந்தனையாய் பேச்சு மூச்சற்றவனானான். நடைப்பிணம் போல் அலைந்தான். வாய்க்கு வந்தபடி பிதற்றினான். இளவரசனுக்கு ஏதேனும் பேயோ, பித்தோ பிடித்து விட்டதென்று எல்லாரும் கலவரமடைந்தனர். மருத்துவர் பலப்பலர் வந்து முயன்றும் அவன் நிலை நாளுக்குநாள் சீர்கெட்டே வந்தது.

மலைக்கோட்டையின் மன்னன் பெயர் மணிமார்பன். அவனுக்கு எழுமுடி ஒரே புதல்வன். அத்துடன் செம்பாலை என்ற ஒரே புதல்வியும் இருந்தாள். எழுமுடியின் நிலைகண்டு செம்பாலையும் உருகினாள். மன்னனும் துடித்தான். அவன் குறையறிந்து குணப்படுத்துபவர்களுக்கு நாட்டில் பாதியையும் தன் புதல்வியையும் தருவதாக அவன் எங்கும் முரசறைவித்தான்.

இளவரசன் எழுமுடியின் குறை அறிந்து தீர்க்க யாரும் வரவில்லை. உண்மையில் அவன் நிலைமைக்குரிய காரணத்தை அறிந்தவர் அந்நாட்டில் ஒரே ஓர் ஆள்தான்.அதுவே குளக்கரையில் செம்மலர்த்தாளின் பின் நின்று அவளைப் பார்த்திருந்த கிழவி.