சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
101
அவர் வருந்தினர். கலஹாட் போன்ற சிலர் காணக்கூடும் என்று மகிழ்வும் கொண்டார்.
கலஹாட் முதலில் தம் வாளுக்கு இசைந்த கேடயத்தை நாடிச் சென்றார். உள்ளத் தூய்மையற்றவர் எடுத்தால் அவர்களை வீழ்த்தும் திறமுடைய கேடயமொன்று ஒரு மடத்திலிருப்பது கேட்டு அதனைக் காணச் சென்றார். அது அரிமாத்தியா ஜோஸப் இறக்கும் போது விட்டுச் சென்றது. அது தூய வெண்ணிற முடையது. ஜோஸப் தம் குருதியால் அதில் சிவந்த சிலுவைக் குறியிட்டிருந்தார். அதனை எடுத்துக்கொண்டு பலநாள் பயணம் செய்து பல நாடுகளுக்கும் சென்றார்.
லான்ஸிலட் வழியில் ஒரு கோயிலின் பக்கத்தில் செல்லுகையில் பலகணி வழியாய் மூடப்பட்டிருந்த திருக்கிண்ணத்தைக் கண்டும் உள்ளே நுழைய முடியாது போனார். வெளியில் சோர்ந்து படுத்திருக்கையில் கனவில் மற்றொருமுறை அது தோற்றமளித்தது. ஆனால், அப்போதும் அதனை அணுக உடலில் ஆற்றலற்றுப் போயிற்று.
அங்கிருந்து ஒரு மரக்கலத்திலேறிச் செல்கையில் கலஹாட் பெருந்தகை வந்து அவரைக் கண்டார். சில நாள் தந்தையும் மகனும் அளவளாவியிருந்தனர். பின் வெண்கவசம் அணிந்த வீரன் தன் குதிரையில் வரும்படி கலஹாட்டை மட்டும் அழைக்க, அவர் லான்ஸிலட்டிடம் பிரியா விடைபெற்றுச் சென்றார்.
வழியில் கலஹாட், பெர்ஸிவல், பலீஸ் என்ற இருவரையும் கண்டு உடனழைத்துக் கொண்டு முன் லான்ஸிலட் கனாக் கண்ட இடமாகிய கார்போனெக் அரண்மனையை அடைந்தார். இவ்விடத்தில் முதியோன் ஒருவன் திருக்கலத்தை மூடியேந்திக் கொண்டு வந்து காட்சியளித்தான். பின் அவன் அவர்களிடம் “நீங்கள் அனைவரும் கப்பலேறி ஸாராஸ் நகரையடையுங்கள். அங்கு நீங்கள் அதனைத் திரையின்றி ஊனக் கண்ணால் காண்பீர்கள். மனிதர் அதனைக் கடைசியாகக் காண்பது அப்போதுதான். விரைவில் அது வானுலகம் சென்றுவிடும்,' என்றனர்.