சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
111
மீண்டும் வாளைப் புதைத்து வைத்து வந்து முன்போலவே கூறினான்.
இத்தடவை சினத்தால் ஆர்தர் உடலெல்லாம் படபடத்தது. “எனக்கு ஒரு நண்பர் மீதி என்ற எண்ணமும் போயிற்று. என் இறுதி முயற்சியில் நான் இறந்தாலும் கேடில்லை. நானே சென்று வாளை எறிந்து வருகிறேன்," என்று எழத் தொடங்கினார்.
பெடிவீயர் அவர் காலில் வீழ்ந்து “பெருந்தகையோய்! மன்னித்தருள்க! என் சிறுமையையும் கோழைமையுைம் பொறுத்தருள்க. தாங்கள் எழ வேண்டாம்; அக் கொடுமைக்கு நான் ஆளாகக் கூடாது. இதோ நானே சென்று வாளை எறிந்து வருகிறேன்", என்று சென்றார்.
இரண்டு மனிதர் சேர்ந்து தூக்க வேண்டும் என்ற அளவில் பளுவுடைய அவ்வாளைப் பெடிவீயர் எடுத்துச் சென்று முழு வலிமையுடன் தலையைச் சுற்றிச் சுழற்றி வீசியெறிந்தான். அப்போது முழுநிலாக் காலமாதலின் நிலவொளியில் அவ்வாள் ஒரு பேரொளிப் பிழம்பு போல் ஒளிர்ந்தது. பெடிவீயர் வியப்பும் துயரமும் கலந்த உணர்ச்சிகளுடன் அதையே பார்த்து நின்றான். ஆனால், அது நீர்ப்பரப்பில் வந்து விழுமுன் வியக்கத்தக்க வகையில் வெண்பட்டாடையணிந்த ஒரு ஒள்ளிய மென் கை அதனை ஏற்று மும்மறை சுழற்றி வீசி அதனுடன் உட்சென்றது. இக்கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு வியப்பும் அச்சமும் இறும்பூதும் கலந்த தோற்றத்துடன் அவன் ஆர்தரிடம் வந்து மூச்சு விடாமல் அனைத்தும் கூறினான்.
ஆர்தர் அது கேட்டு மனநிறைவு காண்டார். பெடிவீயரிடம் “நண்பரே! என் நாள் இப்போது அணுகி விட்டது. மெர்லின் கூறியபடி என் யாக்கை இறவா யாக்கை யானாலும் புறப்புண்களும் அகப்புண்களும் சேர்ந்து என் உரத்தைக் குலைத்தன. பிரிட்டன் இன்றிருக்கும் நிலையில் நான் நலமடைய முடியாது. ஆயின், நான் இனிச் செல்லுமிடத்தில் நன்மையன்றித் தீமையோ, ஒளியின்றி இருளோ, அன்பன்றி வன்போ இல்லை. அவ்விடத்தில் சென்று நான் குணமடைந்து