18. ஒடிஸியஸின் அருஞ்செயல்கள்
(தமிழருக்குச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் போல, இந்தியருக்கு இராமாயண பாரதம்போல, கிரேக்கருக்கு இலியட், ஒடிஸி ஆகியவை, இரு தனிப்பெரும் காப்பியங்கள் ஆகும். ஒடிஸியின் கதைப் பகுதியே ஒடிஸியஸின் அருஞ்செயல்கள் என்ற இந்தக் கதை.)
கிரேக்க உலகிலேயே அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவன் ஒடிஸியஸ் தான். அவன் இதாகா என்ற சிறு தீவின் அரசன். அவன் பெயரைக் கேட்டாலே வீரரும் வேந்தரும் நடுங்குவர். ஆனால், அவன் மனைவி பெனிலோப்பிடம் அவன் பெட்டிப் பாம்புபோல் அடங்கிக் கிடந்தான்.
கிரேக்கரிடையே ஹெலென் என்ற அழகிய பெண் இருந்தாள். அவள் அகமெம்னான் என்ற பேரரசன் மனைவி. அவளை அயலினத்தானாகிய டிராய் நகர் இளவரசன் தூக்கிக் கொண்டு சென்றான். டிராய்கோட்டை கொத்தளங்களை யுடைய கடல் கடந்த பெருநகரம், தன் இனத்தின் மதிப்பைக் கெடுத்த டிராய் நகரத்தாரை வென்று ஹெலெனை மீட்டுவரக் கிரேக்கர் புறப்பட்டனர். ஒரு பெண்ணுக்காக ஏன் வ்வளவு
பேர் அழிய வேண்டும் என்று ஒடிஸியஸ் வாதிட்டுப் பார்த்தான். யாரும் கேட்கவில்லை. எனவே கிரேக்கருக்கும் டிராய் மக்களுக்கும் பெரும்போர் மூண்டது.
பத்தாண்டு முற்றுகை நடைபெற்றது. எத்தனையோ வீரர் இருபுறமும் மாண்டனர்.எத்தனையோ களங்களில் செங்குருதி பெருக்கெடுத்தோடிற்று, இறுதியில் ஒடிஸியஸின் ஆழ்ந்த சூழ்ச்சித் திறத்தின் உதவியால், கிரேக்கர் வெற்றி பெற்று மீண்டனர்.