பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

அப்பாத்துரையம் - 36

அந்தத் தீவுக்குத் தாமரைத் தீவு என்று பெயர். அங்கே மாலைப் பொழுதும் தென்றலும் இளவெயிலும் இளநிலவும் மாறாதிருந்தது.எங்கும் தாமரை பூத்துக் குலுங்கிற்று. அங்குள்ள மக்கள் யாவரும் தாமரை இதழையும் பூந்துகளையும் உண்டு, தாமரைத் தேனைக் குடித்துச் செயலற்று அரைத்துயிலில் ஆழ்ந்திருந்தனர். முதலில் சென்ற கிரேக்கர் தாமரை யிதழுண்டு துயிலில் ஆழ்ந்தனர். அதுகண்ட ஒடிஸியஸ் தாமரையைத் தின்னாமல் தன்னை அடக்கிக் கொண்டதுடன்,தோழர்களையும் அரும்பாடு பட்டுத் தடுத்தான். துயின்ற தோழரையும் இழுத்துத் தூக்கிக் கொண்டு, அவர்கள் கலங்களிலேறி விரைந்து கடந்தார்கள்.

கடலில் அவர்கள் வழிதவறித் திசை தெரியாது சென்றார்கள். நெடுநாளாகக் கரையே காணவில்லை. பசியும் நீர் வேட்கையும் கடலோடிகளைக் கலக்கின. கடைசியில் இனிய நீரூற்றுகளும் கனி மரங்களும் நிறைந்த ஒரு மிகப் பெரிய தீவைக் கண்டனர். அனைவரும் மனமகிழ்ச்சியுடன் அதில் உண்டு பருகி உறங்கினார்கள். இரவு கழிந்ததும் அவர்கள் எங்கும் சுற்றிப் பார்வையிட்டனர். அங்குள்ள காலடித்தடங்கள் மனிதர் காலடித் தடங்களை விட எவ்வளவோ பெரிதாயிருந்தன. தடங்கள் சென்ற வழிகளில் ஒன்றைப் பின்பற்றி அவர்கள் ஒரு பெரிய குகையை அடைந்தனர். தோழர்கள் உள்ளே செல்ல அஞ்சினார்கள். ஆனால், ஒடிஸியஸ் துணிந்து முன் சென்றான். அவர்கள் பின் சென்றனர். அங்கே ஆடுகள் கும்பு கும்பாக நின்றன. கிரேக்கர் சிலர் ஆவலுடன் அவற்றில் பால் கறந்து குடித்தனர்.

குகையில் அவர்கள் நெடுநேரம் மனமகிழ்ச்சியுடன் இருக்கவில்லை. அதற்குள் தடாலென்ற பெருத்த ஓசை கேட்டது. அதை அடுத்து, மனிதரைப் போல இரண்டு மூன்று பங்கு உயரமுள்ள ஒரு கோர உருவம் அவர்களை அணுகிற்று. அதன் முகத்தில் கண்கள் இருக்குமிடத்தில் எதுவுமில்லாமல், நெற்றியில் மட்டும் ஒரே ஒரு பெரிய கண் இருந்தது. அந்த உருவத்தைக் கண்ட கிரேக்கரனைவரும் நடுநடுங்கினர். தப்பி ஓட வழியில்லை. ஏனென்றால் வரும்போதே உருவம் ஒரு பருங்கல்லால், குகை வாயிலை அடைத்தது. அந்த