19. பொன்மறித்தேட்டம்
(பொன்மறி என்பது பொன்மயமான கம்பிளியாடு, அதன் கம்பிளியைக் கைப்பற்றக் கிரேக்க வீரர் ஐம்பதின்மர் செய்த கடுமையான பயணம் கிரேக்க இலக்கியத்தில் பேர் போனது. பொன் அக்காலத்தில் எவ்வளவு அரும்பொருளா யிருந்தது என்பதையும் அதுபற்றி மக்கள் காட்டிய வியப்பார் வத்தையும் இக்கதை காட்டுகிறது. அத் தொல்பழங்காலத்தில் தமிழகத்தில் மட்டுமே தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது.)
பொன்முகிலின் இறைவியாகிய நெஃவேலேயை, அதமஸ் என்ற வேந்தன் மணந்து ஓர் ஆணையும் பெண்ணையும் குழந்தைகளாகப் பெற்றான். அதன்பின் அவன் அவளைப் புறக்கணித்து இனோ என்ற இரண்டாம் மனைவி ஒருத்தியை மணந்து கொண்டான். இனோவின் தீயுரை கேட்டு அரசன் தன் குழந்தைகளைக் கொல்லப் புகுந்தான். நெஃவேலே வெகுண்டு, நாட்டின்மீது பஞ்சத்தை ஏவிவிட்டதுடன், பொன்மறி யொன்றை அனுப்பிப் பிள்ளைகளைக் காப்பாற்றச் செய்தாள்.
பிள்ளைகளை முதுகிலேற்றிக் கொண்டு பொன்மறி வான்வழியாகப் பறந்து கால்சிஸ் என்ற நகரம் சென்றது. பெண் குழந்தை வழியில் நழுவிக் கடலில் விழுந்துவிட்டது. ஆனால், ஆண் குழந்தையைக் கால்சிஸ் அரசன் ஏற்று, பொன்மறியையும் கோயிலில் பலியிட்டான். அதன் பொன்மயமான கம்பிளி ஒரு மரத்தின்மீது தொங்கவிடப் பட்டது. நெஃவேலேயின் கட்டளைப்படி என்றும் உறங்காத ஒரு வேதாளம் அதைக் காத்து வந்தது.
கிரேக்க உலகெங்கும் பொன்மறியின் பொன்மயமான கம்பிளியின் புகழ் பரவிற்று. மனிதர் கனவிலும் கைப்பற்றக் கருத முடியாத ஒரு பொருளாக அது எல்லோராலும் குறிக்கப்